» சினிமா » திரை விமர்சனம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் - சிம்பு நடித்துள்ள தக் லைஃப் விமர்சனம்!

வியாழன் 5, ஜூன் 2025 4:18:06 PM (IST)



டெல்லியில் தாதாக்களாக வலம் வரும் கமல்ஹாசன் - மகேஷ் மஞ்சரேக்கர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஒரு சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனை கொல்ல சதி நடக்கிறது. அப்போது சிறுவனாக இருக்கும் சிம்புவை வைத்து கமல்ஹாசன் அந்த சதியிலிருந்து தப்புகிறார். அப்போது முதல் சிம்பு கமல்ஹாசன் உடன் வளர்கிறார். சிம்புவை தனக்கு அடுத்து தொழிலில் இறக்க கமல்ஹாசன் விரும்புகிறார்.

ஒரு கட்டத்தில் சிம்பு தனக்கு எதிராக செயல்படுவதாக கமல்ஹாசன் சந்தேகப்படுகிறார். இது தெரிந்து சிம்புவும் வருத்தம் கொள்கிறார். சூழ்நிலையை பயன்படுத்தி சிம்புவை கமல்ஹாசனுக்கு எதிராக கூட்டாளிகள் திசைதிருப்புகிறார்கள். இதனால் கமல்ஹாசனை கொலை செய்து அவரது இடத்தை தட்டிப் பறிக்க சிம்பு ஆயத்தமாகிறார். அதற்கான சதி திட்டம் தீட்டுகிறார். சிம்புவின் சதி திட்டம் பலித்ததா? கமல்ஹாசனுக்கு என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதி கதை.

தாதாவாக வலம் வரும் கமல்ஹாசன் உடல் மொழியிலும், பேச்சிலும் மிரட்டி இருக்கிறார். இளமையான தோற்றத்தில் வரும்போது நாயகன் படத்தை நினைவு கூறுகிறார். மனைவியாக அபிராமி, காதலியாக திரிஷா என காதல் மன்னனாகவும் கலக்குகிறார். சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது.

ஆர்ப்பரிக்கும் நடிப்பை காட்டி சிம்பு அடடா சொல்ல வைக்கிறார். கமலுடன் அவர் வரும் காட்சிகள் அத்தனையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. கமல்ஹாசனை தீர்த்து கட்ட திட்டம் போடும்போது வில்லத்தனத்தால் பயமுறுத்துகிறார். திரிஷாவின் வனப்பான அழகு மனதைக் கொள்ளை அடிக்கிறது. கமல்ஹாசன் உடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

அபிராமி குடும்ப பாங்கான முகமாக வருகிறார். இரண்டாம் பாதியில் கலங்கடிக்கும் நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ரவுடிகளாக வரும் நாசர், ஜோஜூ ஜார்ஜ், சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி என அனைவருமே அவரது கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு மிரட்டல் தருகிறது. கேமராவை 360 டிகிரியில் சுழற்றி வித்தை காட்டியுள்ளார். ஏ.ஆர் ரகுமானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பின்னணி இசையும் பிரமாதம். முன்கூட்டியே கணிக்க கூடிய சில காட்சிகள் பலவீனம். ரங்கராய சக்திவேல் கதாபாத்திரத்தில் கமல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். 

வயதுக்கு மீறிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அமரன் கதாபாத்திரத்தில் துடிப்பான இளைஞராக சிம்பு தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்காக உருகுவது, இரண்டாம் பாகத்தில் கொல்லத் துடிப்பது என அவரின் நடிப்பை ரசிக்கலாம். கொடுத்த வேலையை த்ரிஷா செய்திருக்கிறார். என்றாலும் இப்படத்துக்கு அவர் கதாபாத்திரம் ஏன் என்று குழப்பத்தையும் தவிர்க்க முடியவில்லை.

கமலின் மனைவியாக அபிராமி, அண்ணனாக நாசர், மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் அதிகாரியாக அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி, பகவதி, ஜோஜூ ஜார்ஜ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. வழக்கமான தாதா படமாகவும் இல்லாமல், மணிரத்னம், கமல் படமாகவும் அல்லாமல் எடுத்திருப்பது பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்தான். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory