» சினிமா » திரை விமர்சனம்
தனுஷின் கர திரை விமர்சனம்: விறுவிறுப்பான தொடக்கம், சறுக்கிய திரைக்கதை!
வெள்ளி 1, மே 2026 11:46:16 AM (IST)

‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, நடிகர் தனுஷுடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘கர’. 1991-களில் நடக்கும் ஒரு ‘ஹெய்ஸ்ட்’ (Heist) திரில்லராக உருவெடுத்துள்ள இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?
கதைக்களம்: 1991-ஆம் ஆண்டு, ஒரு நள்ளிரவில் பூட்டியிருக்கும் வீட்டை நோட்டம் பார்க்கும் திருடன் கரசாமி (தனுஷ்). அவருக்கும் அவரைத் துரத்தும் டிஎஸ்பி பரதனுக்கும் (சுராஜ் வெஞ்சரமூடு) இடையிலான மோதலே ஆரம்பம். ஒரு கட்டத்தில் திருந்தி வாழ நினைக்கும் கரசாமி, தனது மனைவி செல்வியுடன் (மமிதா பைஜு) ஆந்திராவுக்குச் சென்று தொழில் தொடங்க முயல்கிறார். ஆனால், வங்கி கடன் கிடைக்காதது மற்றும் குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் பழைய பாதைக்கே திரும்புகிறார். அதன் விளைவுகள் என்ன என்பதே மீதிக்கதை.
மிரட்டலான தொடக்கம்: படத்தின் முதல் 15 நிமிடங்கள் விக்னேஷ் ராஜாவின் மேக்கிங் ஸ்டைலை பறைசாற்றுகின்றன. அந்த நள்ளிரவுத் திருட்டு காட்சி, ஒளி மற்றும் ஒலி அமைப்பு என அனைத்தும் ஒரு சர்வதேச தரத்திலான த்ரில்லர் படத்தைப் பார்த்த உணவைத் தருகிறது.
கரசாமி கதாபாத்திரத்திற்குத் தனது நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார் தனுஷ். கோபம், பலவீனம், குடும்பப் பாசம் என அனைத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ். ரவிக்குமார் என அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது.
முதல் பாதியின் குறைகளை மறக்கடிக்கும் வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது படத்தின் இடைவேளைக் காட்சி. ஒரு விறுவிறுப்பான ‘பூனை - எலி’ ஆட்டமாகத் தொடங்கிய படம், அடுத்தடுத்த காட்சிகளில் சென்டிமென்ட் பக்கம் அதீதமாகச் சாய்ந்து விடுகிறது. குறிப்பாகத் தந்தை - மகன் பாசக் காட்சிகள் திரைக்கதையின் வேகத்தைத் தடை செய்கின்றன.
இரண்டாம் பாதியில் நடக்கும் பல திருப்பங்களை முன்கூட்டியே கணிக்க முடிவது பலவீனம். விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் படத்திற்குத் தேவையான ‘ட்விஸ்ட்கள்’ இதில் மிஸ்ஸிங். ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் இனிமை என்றாலும், பின்னணி இசை முந்தைய தனுஷ் - ஜி.வி கூட்டணியின் மேஜிக்கை நிகழ்த்தத் தவறிவிட்டது.
90-களில் நடக்கும் கதையாகக் காட்டியிருப்பதற்குப் பின்னணியில் பெரிய லாஜிக் ஏதுமில்லை. இருப்பினும், வளைகுடா போர் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற சமகால அரசியலைத் தொட்டுச் சென்ற விதம் சிறப்பு. ஆனால் அவை கதையோடு ஆழமாக ஒட்டவில்லை.
சுருக்கமாகச் சொன்னால் முதல் 15 நிமிடங்கள் மற்றும் இடைவேளைக் காட்சியில் காட்டிய நேர்த்தியைப் படம் முழுவதும் காட்டியிருந்தால், ‘கர’ ஒரு தரமான த்ரில்லராக அமைந்திருக்கும். திணிக்கப்பட்ட சென்டிமென்ட் மற்றும் இழுவையான திரைக்கதையால் ‘கர’ ஒரு சராசரி அனுபவமாகவே முடிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2040-ல் காதல் எப்படி இருக்கும்? – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி விமர்சனம்!
புதன் 15, ஏப்ரல் 2026 5:26:24 PM (IST)

லீடர் - லெஜெண்ட் சரவணனின் ஆக்ஷன் ரீ-என்ட்ரி எப்படி?
சனி 4, ஏப்ரல் 2026 10:53:44 AM (IST)

சினிமா விமர்சனம்: யூத் - விடலை பருவத்துக் காதல் கலாட்டா!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:50:36 AM (IST)

ரன்வீர் சிங்கின் ஆக்ஷன் அவதாரம் - துரந்தர் 2 திரை விமர்சனம்
வெள்ளி 20, மார்ச் 2026 5:34:23 PM (IST)

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் விமர்சனம்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:37:57 PM (IST)

ஜீவா நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் திரைப்பட விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 8:56:11 PM (IST)

