» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தமிழகத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது..
14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. தொடரின் கடைசி நாளான நேற்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, ஸ்பெயினுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. ஜெர்மனி அணி தரப்பில் 26-வது நிமிடத்தில் ஜஸ்டஸ் வார்வெக்கும், ஸ்பெயின் அணி சார்பில் 33-வது நிமிடத்தில் நிக்கோலஸ் முஸ்டாரோஸும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த இரு கோல்களும் பீல்டு கோலாக அடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷுட் அவுட் நடத்தப்பட்டது.
இதில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி 1982, 1985, 1989, 1993, 2009, 2013, 2023 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி கோப்பையை வென்றிருந்தது.
ஷுட் அவுட்டில் ஸ்பெயின் அணி தனது கடைசி முயற்சியில் கோல் அடிக்க எளிதாக கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது. ஜெர்மனி அணியின் கோல்கீப்பர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் இதை ஸ்பெயின் வீரர் பிராடோ ஜுவான் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.
முன்னதாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இரு முறை சாம்பியன்களான இந்தியா - அர்ஜெண்டினா அணிகள் மோதின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி நிக்கோலஸ் ரோட்ரிக்ஸ் கோல் அடிக்க அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 44-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி தனது 2-வது கோலை அடித்தது. அந்த அணியின் வீரர் சாண்டியாகோ பெர்ணான்டஸ் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-0 என முன்னிலை வகித்தது. கடைசி 11 நிமிடங்கள் வரை அர்ஜெண்டினா அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.
49-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அங்கித் பால் கோலாக மாற்றினார். அடுத்த 3-வது நிமிடத்தில் மன்மீத் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடினார்கள். 57-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் கிடைத்தது. இதில் ஷர்தா திவாரி கோல் அடிக்க இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 58-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து.
இதில் அன்மோல் எக்கா கோல் அடிக்க இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தனது முன்னிலையை அதிகரித்துக் கொண்டது. இதன் பின்னர் இந்திய அணி டிஃபன்ஸை பலப்படுத்தி கோல் வாங்காமல் பார்த்துக் கொண்டது.
அதேவேளையில் எதிரணிக்கு அழுத்தமும் கொடுத்தது. முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து கடைசி 11 நிமிடங்களில் இந்திய அணி 4 கோல்களை அடித்து வெற்றி பெற்றது பாராட்டும் வகையில் இருந்தது.
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும், பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.2.50 லட்சம் வழங்கப்படும் எனவும் ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)

விஜய் ஹசாரே தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பின் விராட் கோலி.!
புதன் 3, டிசம்பர் 2025 12:46:19 PM (IST)

ஐ.பி.எல். போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
புதன் 3, டிசம்பர் 2025 8:28:27 AM (IST)


.gif)