» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி: நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

திங்கள் 26, ஜனவரி 2026 11:43:56 AM (IST)



நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி குவாஹாட்டியில் நேற்று (ஜனவரி 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மார்க் சாப்மேன் 32 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹார்திக் பாண்டியா மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 10 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

சஞ்சு சாம்சன் முதல் பந்தில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினர். இஷான் கிஷன் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 14 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

அபிஷேக் சர்மா அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் தன்னுடைய பங்குக்கு அதிரடி காட்டிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்களும் (7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்), சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்களும் (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory