» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள்!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:49:45 AM (IST)



சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 3 பெண் நீதிபதிகள் உட்பட 15 பேர் பதவியேற்றதன் மூலம், நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றம் என்ற பெருமையைச் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் பெற்றுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக கே. கோவிந்தராஜன், ரஜினீஸ் பாத்தியால், என். ரமேஷ், ஜி.கே. முத்துக்கமார், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாகவும்; எஸ். ரவீக்குமார், என். திலீப்குமார், இ. மனோகரன், பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என். குணசேகரன் ஆகியோரைக் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி ஜனாதிபதியின் உத்தரவையும், மாநில ஆளுநரின் ஒப்புதல் அறிக்கையையும் வாசித்தார். தொடர்ந்து 15 புதிய நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பிற்குப் பின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வரவேற்புரையாற்றுகையில்: "ஒரே நேரத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 66 பேர் உள்ளனர்.

புதியதாக 3 பெண் நீதிபதிகள் சேர்ந்ததன் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றம் என்ற பெருமையைச் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் பெற்றுள்ளது.

மேலும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.சி. பால் கனகராஜ், வி.ஆர். கமலநாதன், ரேவதி, பி. செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து 15 புதிய நீதிபதிகளும் தனித்தனியாக ஏற்புரையாற்றினர்.

நீதிபதிகள் கே. கோவிந்தராஜன், ரஜினீஸ் பாத்தியால்: திருவாசகம், மகாபாரதம் மற்றும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினர். நீதிபதி என். திலீப்குமார்: புறநானூற்றை மேற்கோள் காட்டியும், திருச்செந்தூர் முருகன், தமிழ் மண் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினார்.

நீதிபதி என். முருகன்: "என் குடும்பத்திலும், எங்கள் கிராமத்திலும் நான்தான் முதல் பட்டதாரி. நான் வழக்கறிஞருக்குப் படிக்கும் போது நீதிபதிக்குக் கற்பதாகக் கள்ளம் கபடமில்லாமல் தாய் கூறிய வார்த்தைகள் இன்று உண்மையாகியுள்ளது" எனக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory