» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடை : தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் கோரிக்கை!

சனி 8, ஆகஸ்ட் 2026 5:13:40 PM (IST)

சமூக வலைத்தளப் பயன்பாட்டால் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகளைத் தடுக்கக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோவில்பட்டியைச் சேர்ந்த சிறார் கதை எழுத்தாளர் கோ. சுரேஷ்குமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அவரது மனுவில், "சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் உடனடி அங்கீகாரம் (Likes, Comments) குழந்தைகளின் மூளையில் டோபமைன் தூண்டுதலை ஏற்படுத்தி, அவர்களைப் போதைக்கு அடிமையாவது போன்ற நிலைக்குத் தள்ளுகிறது. 'தவறிவிடுவோமோ' என்ற பயமும் (FOMO) சமூக ஒப்பீடும் மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கின்றன.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சி முழுமையடையாததால், அவர்கள் சுயகட்டுப்பாட்டை இழந்து எளிதில் அடிமையாகின்றனர். இதனால் தூக்கமின்மை, உடல் உழைப்புக் குறைவு மற்றும் கல்விச் செயல்திறன் பாதிப்பு ஏற்படுகின்றன. தமிழகத்தில் 14-16 வயதுடைய குழந்தைகளில் 90% பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இதில் 26%-க்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப் பின்பற்றியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படியும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். சமூக வலைத்தள கணக்குகள் தொடங்கக் கடுமையான வயது சரிபார்ப்பு முறைகளை அமல்படுத்த நிறுவனங்களுக்கு அரசு அழுத்தம் தர வேண்டும்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் குடியுரிமை மற்றும் சமூக வலைத்தளப் பொறுப்புணர்வு சார்ந்த பாடங்களைக் கட்டாயமாக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநிலம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துவதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மூலம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ஆய்வறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory