» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மாதுடையார்குளம் பகுதியில், கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த கொலைச் சம்பவத்திற்குப் பழிக்குப்பழியாக விவசாயி மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவர் கார் மோதவிட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40), விவசாயி. இவருக்குச் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை காளிமுத்து தனது இரண்டு மகன்களையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, ரெட்டியார்புரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மாதுடையார்குளம் அருகே வந்தபோது, இவர்களைப் பின்தொடர்ந்து ஒரு காரிலும் மூன்று இருசக்கர வாகனங்களிலும் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், திட்டமிட்டு காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில், 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
விபத்து நடந்தவுடன் வாகனங்களில் இருந்து இறங்கிய கும்பல், கீழே விழுந்து கிடந்த காளிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரது தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்தது. இதைக் கண்டு கதறிய மற்றொரு மகன் சின்னத்துரையின் வலது காலிலும் அக்கும்பல் கடுமையான வெட்டுக்காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடியது.
விபத்தில் அக்கும்பல் வந்த கார் சேதமடைந்ததால், காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பினர். பின்னர், சம்பவ இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரம்பை மாநில நெடுஞ்சாலையின் நடுரோட்டில் அத்தலையை வீசிவிட்டு மறைந்தனர்.
இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த சிறுவன் சின்னத்துரை மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பலியான இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், கடந்த 2012-ஆம் ஆண்டு இதே மூலச்சி கிராமத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் பெருமாள் பாண்டியன் என்பவர் கொல்லப்பட்டார். அப்போது அவரது தலையும் துண்டிக்கப்பட்டு இதே கரம்பை பகுதியில் வீசப்பட்டது.
அந்த வழக்கில் தொடர்புடைய காளிமுத்து, சில ஆண்டுகள் வெளியூரில் வசித்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஊருக்குத் திரும்பியுள்ளார். இதனை அறிந்த பெருமாள் பாண்டியன் தரப்பினர், 14 ஆண்டு காலப் பகைக்கு பழிக்குப்பழியாக இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தப்பியோடிய 9 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்: தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
திங்கள் 6, ஜூலை 2026 4:44:03 PM (IST)

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:01:49 PM (IST)

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
திங்கள் 6, ஜூலை 2026 3:30:41 PM (IST)

பயன்பாடின்றி முடங்கிய பேட்டரி கார் சேவை: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அவலம்!
திங்கள் 6, ஜூலை 2026 3:21:52 PM (IST)

ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? - கல்வெட்டு விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!
திங்கள் 6, ஜூலை 2026 12:50:06 PM (IST)

முருகன் வரலாற்றை திரித்தால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும்: சீமான் எச்சரிக்கை!
திங்கள் 6, ஜூலை 2026 11:36:45 AM (IST)


