» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்: தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!

திங்கள் 6, ஜூலை 2026 4:44:03 PM (IST)

CongresWC.jpg

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் மக்கள் நலத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் பரிந்துரையின்படி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ப. மாணிக்கம் தாகூர் எம்பி-க்கு இக்கூட்டத்தில் மனப்பூர்வமான வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, புறவாசல் வழியாக பாஜ கட்சியின் கட்டுப்பாட்டில் ஆட்சி அமைவதைத் தடுக்கும் நோக்குடன், தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்கக் கடந்த மே 5-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக்குழு எடுத்த முடிவை இச்செயற்குழு முழுமையாக ஆமோதித்து ஏற்றுக்கொண்டது. அதன்படி, விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், விஸ்வநாதன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 முதல் ஒரு வார காலத்திற்குத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, "லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்” என்ற முழக்கத்துடன் ஊழல் ஒழிப்புப் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உட்கட்சி அமைப்பைப் பலப்படுத்த எஸ்.எஸ்.ஏ.- 2 திட்டத்தின் கீழ் வட்டார, நகர, பேரூராட்சி கமிட்டிகளைச் சீரமைக்கப் பார்வையாளர்களை அனுப்பவும், ஐந்து வாக்குச்சாவடி குழுக்களுக்கு ஒரு மண்டலக் காங்கிரஸ் கமிட்டி அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவால் சுமார் ரூ.7 முதல் ரூ.7.5 கோடி வரை சட்டவிரோதமாகக் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் விசாரணை விபரங்களைச் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் நிர்வாகத் தரவுகளைப் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் அறிந்துகொள்ள ஒன்றிய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், இந்த கூட்டுக்கொள்ளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஒன்றிய பாஜ அரசை இக்கூட்டம் கேட்டுக்கொண்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், கடந்த 12 ஆண்டுகளில் கலால் வரி மூலம் 25 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ள பாஜ அரசு, தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இறுதியாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்" என்று தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி கூறியதை வரவேற்ற செயற்குழு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கக் கர்நாடக அரசின் முயற்சிகளை எதிர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து கடுமையாகப் போராடும் என்று தீர்மானத்தின் வாயிலாக உறுதியளித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory