» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஏப்ரல் 13) மிக விமரிசையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் விளா பூஜைகள் நடைபெற்றன. 

உற்சவர் சுவாமி மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். பக்தர்களின் "அரோகரா" கோஷங்களுக்கு இடையே முதலில் சுவாமி தேரும், அதனைத் தொடர்ந்து அம்மன் தேரும் இழுக்கப்பட்டன. நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த தேர்கள் நிலை வந்து சேர்ந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஒயிலாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேட்பாளர்கள் பங்கேற்பு 

விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜூ, பாஜக மாநிலத் தலைவரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கா. கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய தேரோட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றாகப் பங்கேற்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.


விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்திரன் மற்றும் தமாகா மாவட்டத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்புப் பணியில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory