» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

புதன் 4, மார்ச் 2026 8:35:15 AM (IST)



தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே தமிழக அரசுக்குச் சொந்தமான அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 1 மற்றும் 2-வது அலகுகள் சேதமடைந்து தற்போது பராமரிப்பில் உள்ளன. தற்போது 3, 4 மற்றும் 5-வது அலகுகள் மூலம் சுமார் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலை சுமார் 4:50 மணியளவில், கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியைத் தூளாக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலக்கரி அரைக்கும் பகுதியில் தீப்பிடித்தது. இந்தத் தீ அருகில் இருந்த மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கும், கன்வேயர் பெல்ட்டிற்கும் வேகமாகப் பரவியது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன் தலைமையிலான குழுவினர், 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 5 ½ மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 10:30 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த விபத்தால் ஒரு கன்வேயர் பெல்ட் பாதிக்கப்பட்டாலும், மற்றொரு பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய சென்னையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் வரவுள்ளனர். விபத்து குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory