» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்தை பிரித்து தராததால் பெற்ற தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன் கைது!

திங்கள் 19, ஜனவரி 2026 3:24:16 PM (IST)

விளாத்திகுளம் அருகே சொத்தை பிரித்து தராததால் தாயை கொன்று உடலை கிணற்றில் வீசிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த காடல்குடி அருகே உள்ள மிட்டாவடலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரது மனைவி பேச்சியம்மாள் (70). இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. பேச்சியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்ததோடு விவசாய வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி முதல் அவர் திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் பதறிய அவரது உறவினர்கள் பேச்சியம்மாளை பல இடங்களில் தேடிவந்துள்ளனர். கடந்த 11-ம் தேதி மிட்டாவடலாபுரம் கிராமத்தில் காட்டுப்பகுதி ஊருணியில் உள்ள கிணற்றில் சடலம் மிதப்பதாக காடல்குடி போலீசாருக்கும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் அழுகிய நிலையில் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அழுகிய நிலையில் சேலை வைத்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது காணாமல் போன பேச்சியம்மாள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பேச்சியம்மாளின் மூத்த மகன் சக்திவேல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் தாயை கொலை செய்ததாக கூறினார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குடும்பச் சொத்தை பிரித்து தரும்படி பேச்சியம்மாளிடம் அவரது மூத்த மகன் சக்திவேல் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். உடன் பிறந்த மற்ற பிள்ளைகள் இருக்கும் போது சொத்தை உனக்கு மட்டும் எப்படி பிரித்துக் கொடுக்க முடியும் என்று அவரது தாய் பேச்சியம்மாள் கூறி வந்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி சக்திவேல் (50) அதே பகுதி உச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் முருகன் (55) என்பவருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பேச்சியம்மாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது தாய் பேச்சியம்மாளிடம் சொத்தை பிரித்து தரக் கூறி சக்திவேல் கடுமையாக சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சக்திவேல் தனது கழுத்தில் போட்டிருந்த துண்டை எடுத்து பேச்சியம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதைத் தடுக்க முயன்ற முருகனையும் தனது தாய்க்கு ஏற்பட்ட நிலை உனக்கும் ஏற்படும் என்று மிரட்டியுள்ளார். தொடர்ந்து முருகனின் உதவியுடன் பேச்சியம்மாளின் கை கால்களை கட்டி உடலில் கல்லை வைத்து அருகில் இருந்த ஊருணி கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தாயை கொலை செய்த சக்திவேல் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் முருகன் ஆகியோரை காடல்குடி போலீசார் கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory