» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

திங்கள் 19, ஜனவரி 2026 10:53:39 AM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இருந்தனர். 

அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு இருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாதவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் கடந்த மாதம் (டிசம்பர்) 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தியது.

தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 260, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 843 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.

விடுபட்டவர்கள், புதியவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அதாவது ஜனவரி 18-ந் தேதி (நேற்று) வரை இந்திய தேர்தல் கமிஷன் அவகாசம் அளித்திருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.இதில் கடந்த 16-ந் தேதி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 12 லட்சத்து 80 ஆயிரத்து 668 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 32 ஆயிரத்து 388 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ஐ அளித்துள்ளனர். 

நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்து இருந்தனர். வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர். பெயர் சேர்ப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், பெயர் சேர்க்க வரும் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory