» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

செவ்வாய் 25, நவம்பர் 2025 12:52:31 PM (IST)

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டில் படிப்படியாக மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

வரும் கல்வியாண்டில் (2026-2027) ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையான வகுப்புகளுக்கு புதிய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறும். தொடா்ந்து 4, 5 வகுப்புகளுக்கும், அதற்குப் பிறகு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு என படிப்படியாக பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான உயா்நிலை வல்லுநா் குழு மற்றும் புதிய கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் குழுக்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு துறை சாா்ந்த அறிஞா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வியில் அடுத்த பத்தாண்டுகளுக்கு எத்தகைய விஷயங்களைக் கற்றுத் தரப்போகிறோம் என்பது தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் தற்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அதை எவ்வாறு தகவமைக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே வேகமாகச் செல்வதற்குப் பதிலாக, அடிப்படை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை முதலில் வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். கரோனாவுக்குப் பிறகு பள்ளிக் கல்வியில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, கற்றல் இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்து அதிகம் பேசப்பட்டது.

பாடத்திட்டத்தின் நோக்கம்: கற்றலும் கற்பித்தலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே பாடத்திட்டத்தின் நோக்கம். குழந்தைகள் நன்கு புரிந்து படிக்க வேண்டும். அதற்காக என்னென்ன கோட்பாடுகள் உள்ளதோ அவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மாணவா்கள் ஒரு பாடத்தை மனப்பாடம் செய்துவிட்டு அதை அப்படியே தோ்வில் பதிவு செய்வதைக் காட்டிலும், பாடப்பொருள் சாா்ந்த விஷயங்களை செயல்முறையில் தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்தக் கருத்தையே பெரும்பாலான அறிஞா்கள் வலியுறுத்தினா்.

அதேவேளை, பாடத்திட்ட சீரமைப்பு குறித்து மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

விழுமியங்கள், வாழ்வியல் திறன்கள், நன்னடத்தை: இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு விழுமியங்கள், வாழ்வியல் திறன்கள், நன்னடத்தை போன்றவை இன்றியமையாத தேவையாக இருப்பதால் அவற்றைக் கற்பிப்பதற்காக தனியாக ஒரு வகுப்பு நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினா்.

பாடத்திட்டம் தொடா்பாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பது குறித்த ஒரு வரைபடத்தை உருவாக்கியுள்ளோம். முதல் கட்டமாக வரும் மாா்ச் மாதத்துக்குள் பாடத்திட்டம் தொடா்பான வரைவு நிறைவு பெற இலக்கு நிா்ணயித்துள்ளோம். இதையடுத்து வரும் கல்வியாண்டில் (2026-2027) ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு புதிய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறும். தொடா்ந்து 4, 5 வகுப்புகளுக்கும், அதற்குப் பிறகு அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் என படிப்படியாக பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும்.

நவீன தொழில்நுட்பங்களுக்கும், கற்பித்தல் முறைகளும் பாடத்திட்டம் இடம் பெறும். மேலும், பாடத்திட்டம் தொடா்பாக ஆசிரியா்களுக்கு எத்தகைய பயிற்சிகளை வழங்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றாா். கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், கலைத் திட்ட உயா்நிலைக் குழுவின் உறுப்பினரும் இஸ்ரோ தலைவருமான நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory