» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திங்கள் 24, நவம்பர் 2025 9:26:58 PM (IST)



அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏவாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த சுதர்சனம், பெரியபாளையம் அருகே உள்ள தானாக்குளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.கடந்த 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள் சுதர்சனத்தை சுட்டுக்கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்தவர்களை தாக்கி 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.

அதையடுத்து இந்த கும்பலை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதையடுத்து ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டு, பவாரியா கொள்ளையர்களான அரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக், ஜெயில்தார் சிங் மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் உள்ளி்ட்ட இருவர், வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 3 பெண்கள் தலை மறைவாகினர். எஞ்சிய ஜெகதீஷ் உள்ளி்ட்ட 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையி்ல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஜி.சீனிவாசன், மகாராஜன் ஆஜராகி வாதிட்டனர். 84 பேர் சாட்சியம் அளித்தனர். 100-க்கும் மேற்பட்ட சான்றாவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், இந்த வழக்கில் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வரும் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தீர்ப்பு விவரம் நவ.24 அன்று அறிவிக்கப்படும் என 22-ம் தேதி நீதிபதி அறிவித்தார்.

இந்தநிலையில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கொலை வழக்கில் 4-வதுதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயில்தார் சிங் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory