» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு!
புதன் 12, நவம்பர் 2025 11:06:59 AM (IST)
ராஜபாளையம் அருகே நள்ளிரவில், கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து மலை அடிவார பகுதிக்கு செல்லும் சாஸ்தா கோவில் சாலையில் தேவதானம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு நச்சாடை தவிர்த்தருளிய நாதர் என்ற கோவிலானது பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம் ஆகும். வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கோவிலை சேத்தூர் ஜமீன்தார் குடும்பத்தினர் பரம்பரையாக நிர்வகித்து வந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோவிலில் 3 பேர் காவலாளிகளாக பணியாற்றி வந்தனர். இதில் மாரிமுத்து என்பவர் பகல் நேரத்திலும், தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 60), சங்கரபாண்டியன் (54) ஆகியோர் இரவு நேர காவலாளியாகவும் வேலை செய்தனர். நேற்று முன்தினம் இரவு பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் பணியில் இருந்தனர். நடை சாத்தப்பட்டு இருந்த நிலையில், கொடி மரம் அருகில் இருவரும் இருந்தனர்.
இந்தநிலையில் கோவில் பின்புறம் உள்ள பாறை வழியாக மதில் சுவரில் ஏறி ஒரு கும்பல் கோவிலுக்குள் புகுந்தது. முதலில் கோவிலில் பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். சத்தம் கேட்டு காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தனர்.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதால், இருவரும் அலறினார்கள். ஆனால், மலை அடிவாரத்தில் உள்ள கோவில் என்பதால், நள்ளிரவு நேரத்தில் அவர்களது அலறல் யாருக்கும் கேட்காமல் போனது. ரத்த வெள்ளத்தில் கொடிமரம் பகுதியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் அந்த கொடூர கும்பல், கோவில் உண்டியல் பூட்டுகளை அடித்து உடைத்தனர். அங்கிருந்த வெள்ளிபொருட்களையும் நொறுக்கி சூறையாடினர். கோவிலில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு அதிகாலையில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் மற்றொரு காவலாளியான மாடசாமி அங்கு வந்தார். கோவிலுக்குள் சென்றபோது ரத்த வெள்ளத்தில் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதுகுறித்து அவர் தகவல் தெரிவித்த பிறகே அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பற்றிய தடயங்கள் சிக்கி இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட நாகராஜ் என்பவரை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது எஸ்.ஐ.யை தாக்கிவிட்டு அவர் தப்ப முயற்சி செய்தார். தப்ப முயன்ற நாகராஜை காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த எஸ்.ஐ. கோட்டியப்ப சாமியும், நாகராஜும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
திங்கள் 17, நவம்பர் 2025 8:30:28 AM (IST)

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)


.gif)