» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய சம்பவம்: கேட் கீப்பர் பணி நீக்கம்!

புதன் 16, ஜூலை 2025 11:18:18 AM (IST)



கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அன்று பணியில் இருந்த கேட் கீப்பர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கடலூரை அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கிராசிங்கை கடலூர் மருதாடு பகுதியில் இயங்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளி வேன் ஒன்ரு கடந்த 8ம் தேதி முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திராவிடமணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விஜயசந்திரகுமார் மகன் நிமிலேஷ் (12) ஆகியோர் உயிரிழந்தனர். 

மேலும், நிமிலேஷின் சகோதரரான விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் விபத்தின்போது மின்சாரம் பாய்ந்த செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (55) ஆகியோர் காயமடைந்தனர். விபத்தின் போது பங்கஜ் சர்மா என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அவர் ரயில்வே கிராசிங் பாதையை மூடாமலிருந்ததே விபத்துக்கு காரணம் என புகார் எழுந்தது.

இதற்கிடையே, பள்ளி வேன் டிரைவர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை திறந்து விட்டதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பங்கஜ் சர்மா விதியை மீறி செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் சர்மாவை ரயில்வே போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது. எனவே, இதுகுறித்து விசாரிக்க தெற்கு ரயில்வே தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுனர் சங்கர், ரயில் நிலைய மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ரயில் டிரைவர்கள் என 13 பேரிடம் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே குழுவின் விசாரணை முடிந்து, அறிக்கையானது சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது. 

அப்போது ரயில் கடப்பதற்கு முன்பு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்துள்ளார். ரயில்கள் வரும் நேரங்களில் அவர் ரயில்வே கேட்டை அடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. அதன்படி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory