» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 120 பேர் கைது: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

திங்கள் 20, ஜூலை 2026 3:46:14 PM (IST)

geethajeevanmariyal.jpg

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திமுகவினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இன்று காலை முதல் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எம்எல்ஏவிடம் விசாரணை நடக்கும் விபரமறிந்து, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் தலைமையில் ஏராளமான திமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் திமுகவினரைச் சமாதானப்படுத்தி அனுப்ப முயன்றனர்.

இதையடுத்து, கலைந்து செல்ல மறுத்த திமுகவினர் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுகிர் தலைமையிலான போலீசார், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி அனைவரையும் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். இதனால் போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், புதூர் மத்திய ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா உட்பட ஏராளமான திமுகவினர் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் திடீரென தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், மறியல் போராட்டம் நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் 20 பெண்கள் உட்பட மொத்தம் 120 பேரைப் போலீசார் கைது செய்து, மடத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளனர்.

கோவில்பட்டியில் மறியல் 
 
கோவில்பட்டி கிழக்கு நகரச் செயலாளர் சுரேஷ் தலைமையில் திரண்ட ஏராளமான திமுகவினர், மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழரசன் படிப்பகம் முன்பாகத் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

போக்குவரத்திற்கு இடையூறாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 9 பெண்கள் உட்பட மொத்தம் 35 திமுகவினரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

மக்கள்Jul 20, 2026 - 06:05:03 PM | Posted IP 172.7*****

எல்லாம் கலவர பயலுக பக்கமே போகக்கூடாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory