» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)
சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி, சி.பி.ஐ. தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கில் தொடர்புடைய காவலர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மற்ற 9 காவலர்கள் (இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் இதர காவலர்கள்) மீது வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, "காவல் நிலையத்தில் வைத்து இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். நிராயுதபாணியாக இருந்த தந்தை, மகன் இருவரையும் இரவு முழுவதும் தாக்கியதை எளிதாகக் கருத முடியாது. எனவே, இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதே சரியானது" என்று கூறி, 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி, சி.பி.ஐ. தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, சிறையில் உள்ள 9 குற்றவாளிகளும் காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்ரீதர், தான் நேரடியாக வாதிட விரும்புவதாகக் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள், "முதலில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யுங்கள்" என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
BabuApr 24, 2026 - 10:01:17 PM | Posted IP 172.7*****
9 perum senjathu miga periya thappu athe athikara powera vachu kollai adichavan mela yellam fir koda podatha case innum iruku cbi athayum pathutu than irukum pola
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)



மக்களின் ஒருவன்Apr 25, 2026 - 06:48:46 PM | Posted IP 172.7*****