» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை ஒதுக்கீடு : தீர்மானத்தை ரத்து செய்ய பாஜக கோரிக்கை!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:18:30 PM (IST)

தூத்துக்குடியில் சலவை தொழிலாளர்கள் வணிக வளாகத்தில், அரசு மதுபானக் கடை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி டி.எம்.பி. காலனி சாலையில் உள்ள சலவை தொழிலாளர்கள் வணிக வளாகத்தின் தரைத்தளத்தில், சுமார் 500 சதுர அடி பரப்பளவில் டாஸ்மாக் கடை அமைக்க மாத வாடகையாக ரூ.12,000 + GST நிர்ணயம் செய்து மாமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதே வளாகத்தில் உள்ள G3, G4, G5 ஆகிய கடைகளுக்கு ஆரம்ப மாத வாடகையாக ரூ.13,250 மற்றும் 18% GST (மொத்தம் ரூ.15,635) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், டாஸ்மாக் கடைக்கு மட்டும் குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்யப்படுவதன் பின்னணி என்ன? என்று ஊடகங்கள் வாயிலாகக் கேள்விகள் எழுந்துள்ளன. 18 முறை ஏலம் விடப்பட்டும் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வராத ஒரு வணிக வளாகத்தில், டாஸ்மாக் கடைக்கு முன்னுரிமை அளிப்பது கண்டிக்கத்தக்கது.

"தமிழகம் போதைப் பழக்கத்தால் தள்ளாடும் நிலையில், இத்தகைய முடிவுகள் சமூக நலனுக்கு எதிரானவை. வி.வி.டி சிக்னல் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர். இங்கு மதுக்கடை அமைந்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்," என அவர் எச்சரித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்குத் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சில மாமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, உறுப்பினர் ஒருவர், "தயவு செய்து இதற்கு அனுமதி வழங்க வேண்டாம்" என உணர்ச்சிவசப்பட்டுக் கோரிக்கை விடுத்தது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி:  "மாநகராட்சியில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன, அவை எங்குள்ளன என்பது குறித்த விவரம் எனக்குத் தெரியாது. அவர்கள் கடை நடத்த இடம் கேட்கிறார்கள்; அந்த இடத்தில் நடத்தக்கூடாது என்று என்னால் கூற முடியாது," என்று மழுப்பலாகப் பதிலளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும்" என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், எம்.பி. கனிமொழி அவர்களும் கூறி வந்த நிலையில், அவர்களின் தொகுதியிலேயே இவ்வாறு நடப்பது முரணாக உள்ளது.

மாமன்ற உறுப்பினரின் எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, "இது குறித்துத் தனியாகப் பேசலாம்" என்று மேயர் கூறியது ஏன்? இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து மேயர் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

திராவிட சாராய மாடல்Feb 27, 2026 - 06:09:57 PM | Posted IP 162.1*****

திராவிட ஆட்சியில் தெருவுக்கு ஒரு டாஸ்மாக் . நல்லா இருக்கு உங்க ஆட்சி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory