» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:14:46 AM (IST)

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப் பெருமானுக்கு நடத்தப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இதில் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் விதமாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி விழாவின் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி குமரி மாவட்ட முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் 48-வது கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி கால்நாட்டு மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 6-வது நாளான நேற்று காலை 5 மணிக்கு மகா கணபதிஹோமம், 11 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு தீபாராதனை, 1.45 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சீர் செய்தல் நிகழ்ச்சி, 2 மணிக்கு வேல் வாங்க புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 4 மணிக்கு சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நாகராஜா கோவிலின் தெற்குரத வீதி, வடக்கு ரதவீதி, மேலரதவீதி, கீழரத வீதி ஆகிய 4 ரத வீதிகளிலும் முருகப்பெருமான், சூரனுடன் போர்புரிந்தபடி வலம் வந்த பின்னர் மாலை 6.35 மணி அளவில் நாகராஜா திடலில் சூரனை, முருகப்பெருமான் வேலால் குத்தி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரனை வதம் செய்ததும் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. அதன்பிறகு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதையடுத்து ஒழுகினசேரியில் உள்ள ஆராட்டுத்துறையில் சாமிக்கு ஆராட்டு நடந்தது. பின்னர் சாமி கோவிலில் எழுந்தருளினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. 11 மணிக்கு சொற்பொழிவு, நண்பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனையை தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது.
குமாரகோவில்
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நேற்று மாலையில் கோவிலில் இருந்து புறப்பட்ட முருகப்பெருமான் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் கோவில் நான்கு ரத வீதிகளில் சூரனோடு போரிட்டார். அப்போது கோவில் கிழக்கு வாசலில் வைத்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது போல் பத்மநாபபுரம் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
வெள்ளிமலை
வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டித் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று வரை 6 நாட்கள் நடந்தது. கடைசி நாளான நேற்று மதியம் 2 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 3 மணிக்கு சிங்காரி மேளம் மற்றும் ஒயிலாட்டம், மாலை 5 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்திற்காக குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். 6.15 மணிக்கு சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.
இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதுதவிர தோவாளை செக்கர்கிரி, மருங்கூர் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)