» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்

வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)



இரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று தேசிய தன்னார்வ இரத்த தான தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள் விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் இன்று (10.10.2025) தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு, அதிகமுறை இரத்த தான முகாம்களை நடத்திய இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்- இரத்த தானம் செய்வது என்பது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். யாரெல்லாம் தொடர்ந்து ரத்தம் கொடுத்து வருகிறீர்களோ அவர்களுக்கு என்னுடைய மரியாதை கலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

முதலில் அதிகமாக ரத்தம் தேவைப்படுவது யாருக்கென்றால் கர்ப்பிணி பெண்களுக்கு தான். கர்ப்பிணிகளுக்கு மூன்றாவது மாதத்தில் இருந்து குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் இரத்த போக்கின் காரணமாகவும் அவர்களுக்கு இரத்தமானது அதிகமாக தேவைப்படும். அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சென்றால் தான் ரத்தம் கிடைக்கும் என்ற நிலை மாறி தற்போது 24 மணி நேரமும் பிரசவம் நடைபெறும் நம்முடைய குழித்துறை பத்மநாபபுரம் பூதப்பாண்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் தற்போது கிடைக்கின்றது.

அடுத்து இரத்தம் அதிகம் தேவைப்படுவோர் யார் என்றால் விபத்துகளில் சிக்கி இரத்தம் இழந்தவர்களுக்கு தேவைப்படும். ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்யும் இரத்தமானது உடனடியாக பயன்படுத்தப்படலாம் அல்லது ஒரு வருட காலம் வரை வைத்து அதனை நம்மால் பயன்படுத்த முடியும். இரத்த தானம் அளிப்பவரின் இரத்தம் வீணடிக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இரத்ததானம் செய்வோரை ஊக்குவிக்கவும் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் கடந்த ஆண்டு அதிகஅளவு இரத்ததான முகாம் நடத்திய பொதுநிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், கல்லூரிகள் உள்ளிட்ட 30 முகாம் அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கடுமையான நோய்கள், சாலை விபத்துக்கள், பிரசவ சிக்கல்கள் போன்ற அவசர தேவைகளுக்கு இரத்த வங்கியால் இரத்தம் இருப்பு இருந்தால் மட்டுமே தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்க இயலும். இந்த வகையில் தான் தன்னார்வ இரத்த தான முகாம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் இரத்த அளவு ஐந்து முதல் ஆறு லிட்டர் வரை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. 

இரத்த தானத்தின் போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே தானம் செய்வது அந்த நபருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது அந்த ரத்தத்தின் அளவு இரண்டு வாரத்தில் உடலால் மீண்டும் உற்பத்தி செய்யப்படும். எனவே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் இரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.

விழாவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மருத்துவ கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெபசிங், உறைவிட மருத்துவர்வர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் ராகேஷ் துறை அலுவலர்கள், பொதுமக்கள், இரத்த கொடையாளர்கள், கல்லூரி மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory