» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நுகர்வோர் உரிமைகளை மாணவர்கள் புரிந்து கொண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேச்சு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

நுகர்வோர் சட்டம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவில் பெண்கள் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி கலையரங்கத்தில் இன்று (30.09.2025) நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ்ராஜன், முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசுகையில்: தமிழ்நாடு அரசு நுகர்வோருக்கு தரமான முறையில் பொருட்கள் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நுகர்வோர் என்பவர் பொருட்களை விலை கொடுத்து வாங்குபவர் அல்லது பயன்படுத்துவோர் ஆவர். நுகர்வோர் பயன்பாடு குறித்தும், பொருட்களின் தரம், பொருட்களின் சரியான எடை அளவு, கலப்படமற்ற பொருட்கள் வாங்குதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகங்களின் வாயிலாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கீழ் முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. பொதுவாக இந்த நியாய விலைக்கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. 20 கிலோ முதல் அதிகப்பட்சமாக 35 கிலோ வரை அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நமது கன்னியாகுமரி மாவட்டமானது ஐந்திணைகளுடன் கூடிய இயற்கை நிறைந்த மாவட்டமாகும். நமக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான பாசன வசதிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் வாயிலாக கிடைக்கின்றன. நகர்ப்புற பகுதிகளில் விவசாயத்திற்கான இட பற்றாக்குறையினால் மாடித்தோட்டம் அமைத்து, அவர்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள்.
ஆனால் நமது மாவட்டத்திற்குட்பட்ட பல இடங்களில் விவசாயம் மேற்கொள்ள போதுமான இடவசதி உள்ளது. இயற்கையாகவே நமது மாவட்டம் விவசாயம் மிகுந்த மாவட்டம். தற்போது விவசாய தொழில் குறுகி வருவதால், மாவட்டத்தின் பெருமையை மீட்டெடுக்கும் விதமாக வருங்கால இளைஞர்களாகிய நீங்கள் விவசாயம் மேற்கொள்ள முன்வரவேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 9 ஆகஸ்ட் 2019 முதல் அமலில் உள்ளது. முந்தைய நுகர்வோர் சட்டம் 1986-னை மாற்றி அமைத்து இன்றைய நவீன கால வர்த்தகம் மற்றும் விற்பனை உத்திகளில் இருந்து நுகர்வோர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவே இச்சட்டம் ஏற்றப்பட்டு உள்ளது.
இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் நுகர்வோர்களை பாதுகாக்க மன்றங்களை ஏற்படுத்துதல், நுகர்வோர் குறைகளை களைதல், தரம் குறைந்த பொருட்களுக்கான தீர்வினை பெற்று தருதல், இணையவழி மற்றும் நேரடி விற்பனைகளில் ஏமாறுவதிலிருந்து நுகர்வோர்களை பாதுகாத்தல், நுகர்வோர்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு அபராதம் விதித்தல், இணையவழியில் நுகர்வோர் குறை தீர்த்தல் உள்ளிட்டவைகள் ஆகும்.
இந்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களின் நலன்களை பாதுகாக்க சில உரிமைகளை வழங்குகிறது. இந்த உரிமைகளாவது பாதுகாப்பு உரிமை, தகவல் அறியும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, கேட்கும் உரிமை, தீர்வு காணும் உரிமை மற்றும் நுகர்வோர் கல்வி உரிமைகளாகும். இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது வாழ்வதற்கான ஒரு முக்கிய தேவையாக அமைந்துவிட்டபடியால் ஒரு சில வர்த்தக நிறுவனங்களினால் நுகர்வோர்கள் பாதிப்படைகின்றனர்.
நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், நுகர்வோர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்காகவும், செலுத்திய மதிப்பிற்கான சேவை மற்றும் பொருட்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் அதற்கான உரிய இழப்பீடை பெற்று தருவதற்காகவும் இச்சட்டம் ஏற்றப்பட்டுள்ளது.
இச்சட்டத்தினை குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே இளம் நுகர்வோர்களான நீங்கள் இன்று தங்களுக்கு அளிக்கப்படும் இப்பயிற்சியினை முழுமையாக கற்று இச்சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உரிமைகளை புரிந்து கொண்டும், நீங்களும் இச்சமுதாயமும் உயர உறுதி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூகபாதுகாப்பு திட்டம்) ராஜகுமார், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கிளாட்சன் பிளஸ்ட் தாகூர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.ஜெயராமபாண்டியன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் முருகன், பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி முதல்வர் ஜெ.பி.ஸ்மித்தா கரோலின், குலசேகரம் நுகர்கோவர் மற்றும் குடிமை உரிமை சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கண்ணன், துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:18:55 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆவின் சார்பில் இலவச பயிற்சிகள் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 10:18:50 AM (IST)

சிறுவர்கள் ஓட்டி வந்த 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:47:03 AM (IST)

குமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:26:20 AM (IST)

மலைவாழ் மக்களுக்கு மின்னணு நல வாரிய அட்டைகள் : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:10:03 AM (IST)
