» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு தனி கவுன்சில் அறிவிக்குமா மத்திய அரசு!!
திங்கள் 22, செப்டம்பர் 2025 10:26:00 AM (IST)
மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசியலமைப்பின் 371வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி தென்தமிழகத்திற்கென்று சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை மத்திய அரசிடம் வழங்குங்கள்” என்று கோவில்பட்டியில் நடந்த தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
தென்மாவட்டங்கள் முன்னேற்றம் அடைய தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை ஆவணமாக தாருங்கள். தென்மாவட்டங்கள் முன்னேற்றம் அடைய தொலைநோக்கு திட்டங்களை வகுத்து மத்திய அரசிடம் வழங்குங்கள். தென்மாவட்டங்களில் என்ன தொழில் செய்தால் நன்றாக இருக்கும்? என்று தெரிவியுங்கள். இதன்மூலம் தென்மாவட்டங்கள் வளருவதற்கான வழிவகுக்கலாம். அடுத்த 20 ஆண்டுக்குள் அதாவது 2047-ம் ஆண்டுக்குள் தென்மாவட்டங்கள் நல்ல முன்னேற்றம் அடைய அனைவரும் ஒத்துழைப்பு அளியுங்கள்.
வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சியில்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஏறத்தாழ இதே பிரச்னைகள் இருப்பதாக சுட்டிக்காட்டி மகாராஷ்டிராவில் விதர்பா, ஆந்திராவில் தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றுக்காக வளர்ச்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெருமளவு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.
எனவே, தென்தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு, பிரத்யேகமாக வளர்ச்சிக்கவுன்சில் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மற்றும் புனே பகுதிகள் மட்டுமே வளர்ச்சி கண்டு வருவதாக கூறி அம்மாநிலத்தின் முக்கியமான விதர்பா பகுதி மக்கள் தனிமாநில கோரிக்கை வைத்து வருகின்றனர். இதேபோல ஆந்திராவிலும் ஐதராபாத்திலும் அதையொட்டிய பகுதிகள் மட்டுமே வளர்ச்சிப்பாதையில் உள்ளதாகவும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தெலுங்கானா மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தனித்தெலுங்கானா கோரிக்கை வலுப்பெற்றும் வருகிறது.
மத்திய அரசு இப்பகுதிகள் மீது கவனம் செலுத்தும் வகையில் வளர்ச்சிக் கவுன்சில் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 371 வது சட்டத்திருத்தத்தின் படி ஒரு மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளுக்கு என்று மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தலாம். இதன்மூலம் இப்பகுதிகளுக்கு என்று பிரத்யேகமாக நிதிஒதுக்கீடு செய்யலாம். இந்த நிதியைக் கொண்டு இப்பகுதிகளின் பின்தங்கிய நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகைளை எடுத்திட முடியும்.
அரசியல் சட்டம் தந்துள்ள இந்த வாய்ப்பை மகாராஷ்டிர மாநிலமும், ஆந்திராவும் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இம்மாநில மக்களின் தொடர் வலியுறுத்தல்களால் 371வது சட்டத்திருத்தத்தின் படி விதர்பாவுக்கும் தெலுங்கானாவுக்கும் வளர்ச்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளன. விதர்பாவுக்கும் தெலுங்கானாவுக்கும் சற்றும் சளைத்த நிலையில் இல்லை தமிழகத்தின் தென்மாவட்டங்கள். இந்த பின்பகுதிகளுக்கு என்னவெல்லாம் காரணங்கள் கூறப்படுகின்றனவோ அதே காரணங்கள் தென்தமிழகத்துக்கும் உள்ளன.
போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்திற்கென வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்கள் துவங்க வந்தால் அவையும் சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே அமைக்கப்படுகின்றன.
தென்மாவட்டங்கள் அனைத்திலுமே போதிய வசதிகளோ அல்லது தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளோ இல்லை. எனவே, தென்தமிழகத்திற்கென பிரத்யேகமாக வளர்ச்சிக்கவுன்சில் அமைத்திட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்கென பிரித்து திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, துõத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களாக ஆக்கப்பட்டன.
இந்த தென்மாவட்டங்கள் அனைத்துமே தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளாகவே இந்த மாவட்டங்கள் அனைத்தும் வளர்ச்சி காணாமல் இருந்து வருகின்றன. பல்வேறு வகையான மூலப்பொருட்களும் கிடைக்கக்கூடிய வசதிகள் இருந்தும் இந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் புதிய தொழில்களை துவங்குவதற்கு எந்த ஒரு பெரிய நிறுவனங்களோ அல்லது தொழிலதிபர்களோ முன்வருவதில்லை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 80 சதவீத மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் இருக்கின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி வீதிகளில் திரிந்து தவிக்கும் நிலை காணப்படுகிறது.
எனவே, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசியலமைப்பின் 371வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி தென்தமிழகத்திற்கென்று சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். இதன்மூலம், வளர்ச்சிக் கவுன்சில் தென்தமிழகத்திற்கும் செய்யப்பட்டு நிதிஒதுக்கீடு செய்திட வேண்டும். தென் மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும் இந்த பிரச்னையில் கட்சி வேறுபாடின்றி குரல் கொடுத்தால் தான் மத்திய அரசின் கவனம் தென் தமிழகம் பக்கம் திரும்பும். மாநில அரசும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)
