» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடற்கரையைக் காப்பாற்ற பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 20, செப்டம்பர் 2025 4:12:05 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் சுற்றுசூழலை பாதுகாக்க நான் என் கடற்கரையைக் காப்பாற்றுவேன் என உறுதியேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வேண்டுகோள் விடுத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (20.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, தூய்மை பணியை துவக்கி வைத்து, சுற்றுசூழல் குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பேசியதாவது -
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் அனைவரும் கலந்து கொண்டுள்ளோம். கன்னியாகுமரி என்றவுடன் நம் அனைவரது நினைவிலும் வருவது அய்யன் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரை பகுதியாகும். இந்த கடற்கரை பகுதி உலகிலேயே மூன்று கடல்களும் சங்கமிக்கும் ஒரு சில பகுதிகளில் நமது கன்னியாகுமரி கடற்கரை பகுதியும் ஒன்றாகும்.
இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் சேர்ந்து சங்கமிக்கிறது. மிகவும் பெருமை வாய்ந்த நமது கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நமக்கு மட்டும் பெருமை அல்ல, இந்த நாட்டிற்கே பெருமையாகும். பொதுமக்கள் ஆகிய நாம் அனைவரும் நாம் இருக்கும் இடத்தில் தேவையற்ற குப்பைகளை சேர்க்கக்கூடாது. கன்னியாகுமரி பேரூராட்சி வாயிலாக காலை முதல் மாலை வரை தினமும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுடன் இணைந்து நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த உலகில் கடல் மூன்றில் இரண்டு பங்காக இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 67 கிலோ மீட்டர் நீளத்தில் கடற்கரை உள்ளது. பயன்பாட்டுக்கு பின் தூக்கி எறியப்படும் பாலித்தீன் பைகள் மலை போல் குவிந்து கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது. இறந்த மீன்களின் வயிற்றுப் பகுதியில் இருந்து ஏராளமான பாலித்தின் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்கள் மட்டுமல்ல கடல் வாழ் உயிரினங்கள் அனைத்திற்குமே இது பெரிய தீங்கை ஏற்படுத்தி உள்ளது. மேலை நாடுகளில் எல்லாம் கடற்கரைகள் மிகவும் தூய்மையாக பாதுகாக்கப்படுகின்றன.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சில மணி நேரம் செலவிடும் ஒரு இடமாக கடற்கரைகள் இருக்கின்றன. எனவே அதிக கவனமுடன் அவை சுத்தம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. உணவுப் பொருட்களை உண்டு விட்டு அதன் கவர்களை அப்படியே விட்டு செல்கிறோம். ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறிகிறோம். இவைகள் எல்லாம் கடலில் தான் சென்று சேருகின்றன. இந்த பாலித்தின் கவர்களை ரசாயன பொருட்கள் என்று சொல்வதை விட உயிர் கொல்லிகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். கடற்கரைகளை சுத்தம் செய்வது என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். கடற்கரைகள் எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால் அது கடல் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களையும் கடற்கரைகளில் வாழும் மக்களையும் பாதிக்கும்.
கடலில் அதிக அளவில் கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. நாம் போடும் குப்பையானது கடலில் சேர்ந்து அந்த உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நம்மால் இந்த பூமிக்கும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நாம் வாழ வேண்டும். பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிரினங்களும் நல்லபடியாக வாழ்வதற்கு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் முழுவதும் ஒழிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று சேகரிக்கப்படும் கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு மாற்று எரிபொருளாக அனுப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 இலட்சம் மரக்கன்றுகள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி முகமையில் உற்பத்தி செய்துள்ளார்கள். மேலும் வனத்துறை, வேளாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை துறையினரும் அதிக அளவில் மரக்கன்றுகள் நடவு செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு ஆறடி வளர்ந்த மரங்கள் நமது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்டு வருகின்றது. அதே போன்று இந்த ஆண்டும் நடவு செய்யப்படும். இதே போன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பசுமை தமிழ்நாடு குறித்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு ஊரில் இருக்கும் நிலப்பரப்பில் 30 சதவீதம் மரங்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் இயற்கை சமநிலை ஏற்படும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் கடற்கரையினை சுத்தமான வைத்திருக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாய்க்கு ஒரு மரக்கன்று திட்டத்தினை வகுத்து பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடையே செயல்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்களது தாய்க்காக ஒரு மரக்கன்றினை நட்டு பராமரித்து வளர்த்திட வேண்டும். இதன் வாயிலாக மாணவ மாணவியர்களுக்கு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு சுத்தமான காற்று பின் சந்ததியினருக்கு வழங்கிடும் பொறுப்புணர்வு கிடைக்கப்பெறும். எனவே பள்ளி மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் தனியார் நிறுவனங்கள் அனைவரும் சுற்றுசூழலை பாதுகாக்க நான் என் கடற்கரையைக் காப்பாற்றுவேன் என உறுதியேற்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தூய்மை பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாரதி, துணை இயக்குநர் (மீன்வளம்) சின்னகுப்பன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, கன்னியாகுமரி நகராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி, பாரதி பவுண்டேசன் நிறுவனர் சுபா, பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)
