» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)



"நீங்கள் விரும்பிய உயர்கல்வி பாடத்தினை தேர்தெடுத்து நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்" என நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறை சார்பில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (28.04.2025) நடைபெற்றது.இவ்வழிகாட்டிக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதோடு, மேற்படிப்பு படிப்பதற்காக வழிகாட்டுதல் முகாம்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று 2024-2025ம் கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் இன்று நடைபெற்று வருகிறது. இம்முகாமின் நோக்கம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சரியான வழிகாட்டுதல்கள் இல்லாது ஏதோ ஒரு உயர்கல்வியில் சேர்வதை தவிர்த்து, குறிப்பிட்ட இலக்குடன், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்ந்த படிப்புகளில் சேர்தேயாகும்.

இம்முகாமின் மூலம், எந்த கல்லூரியை தெரிவு செய்வது மற்றும் எந்த கல்லூரியில் படித்தால் அரசின் நல திட்டங்களை முழுமையாக மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்?, சிறந்த கல்லூரியை தெரிவு செய்வது எப்படி?, மற்றும் சிறந்த கல்லூரியில் படிப்பதினால் எத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இயலும் என்பது சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர்களின் ஐயங்கள் சார்ந்த தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடரும்போதே புதுமைப்பெண் மற்றும் தமிழ் ப தல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000, 6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த கல்லூரிகளில் உயர் கல்வியை தொடர வாய்ப்புள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கல்வி கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

எனவே இத்தகைய வாய்ப்புகளை முழுமையாக மாணவர்கள் தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்த வேண்டும். சரியான கல்லூரிகளை தெரிவு செய்யாததின் விளைவாக கடந்த ஆண்டுகளில் பல மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கல்லூரி தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சிறந்த கல்வியைப் பெற்று பெற்றோருக்கு நிதிநிலை நெருக்கடி ஏற்படா வண்ணம் கல்வியை முழுமையாக நிறைவு செய்து, வாழ்வில் முன்னேற முடியும். மேலும் சிறந்த கல்லூரியில் படித்தால் மட்டுமே படித்து முடித்ததும் விரும்புகிற வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள இயலும். 

உயர்கல்வியை தொடர்வதற்கு அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பது என்பது மிகச் சிறந்ததாகும். தொடர்ந்து அரசு வழங்குகின்ற நல திட்டங்கள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு செயல்படுத்துகின்ற சிறப்பு பயிற்சிகள் அனைத்தும் அரசு நிறுவனங்களிலேயே முறையாக வழங்கப்படுகின்றன. எனவே இப்பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் இதனை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 

மாணவர்கள் தங்களது நண்பர்களின் உதவியால் கல்லூரிகளை தேர்வு செய்வதை தவிர்த்து சிறந்த வழிகாட்டுதலின் மூலம் உரிய கல்லூரிகளை தேர்வு செய்து, பெற்றோருடைய எதிர்பார்பை நிறைவு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் சென்று கல்வி கற்க விருப்பம் இல்லாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சொந்த மாவட்டத்தில் உள்ள சிறந்த கல்லூரிகளில் தங்களது உயர்கல்வியை தொடர முன்வர வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் சில மாணவர்கள் உரிய கல்லூரியை தேர்வு செய்யாததன் விளைவாக, முதல் ஆண்டு முடித்த பின், இரண்டாம் ஆண்டு முதல் தங்களது கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மட்டுமல்லாது தங்களது கல்வி சான்றிதழ்களை பெற முடியாத நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

எனவே இந்நிலை தொடராது மாணவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி இவ்வழிகாட்டுதல் மூலம் சரியான புரிதல்களை தெரிந்து கொள்ளுதல் வேண்டும். உயர்கல்வியை தொடர்வதற்கான வங்கி கடன் சார்ந்த தெளிவுரைகளும் இப்பயிற்சி மூலம் வழங்கப்பட்டது. நீங்கள் விரும்பிய உயர்கல்வி பாடத்தினை தேர்தெடுத்து நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து இன்று நாகர்கோவில் கல்வி மாவட்டத்தை சார்ந்த அகஸ்தீஸ்வரம் மற்றும் ராஜாக்கமங்கலம் வட்டாரத்தை சார்ந்த 163 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும், தொடர்ந்து மதியம் தோவாளை மற்றும் குருந்தன்கோடு வட்டாரத்தை சார்ந்த 151 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தை சார்ந்த மாணவர்களுக்கு இரண்டு பிரிவுகளாக நாளைய தினம் நடைபெறவுள்ளது. 

நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், பேராசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory