» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 படித்த அனைவரும் உயர் கல்வி பயில வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தல்

புதன் 9, ஏப்ரல் 2025 3:37:57 PM (IST)



12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ மாணவியர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரிகளில் படிப்பதற்கு முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நாகர்கோவில் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இன்று (09.04.2025) நடைபெற்றது. இவ்வழிகாட்டிக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர்களிடையே பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதோடு, மேற்படிப்பு படிப்பதற்காக வழிகாட்டுதல் முகாம்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ மாணவியர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு பல்வேறு வழிகாட்டு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களை சிறப்பாக வழிநடத்தி வருகிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வழிகாட்டிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். நாம் அனைவருடைய நோக்கம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் எட்டுவதேயாகும். மேலும் 12ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ மாணவியர்கள் அடுத்த கட்டமாக எந்த மேற்படிப்பை தொடரலாம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சரியான வழிகாட்டுதல்கள் இல்லாது ஏதோ ஒரு உயர்கல்வியில் சேர்வதை தவிர்த்து, குறிப்பிட்ட இலக்குடன், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்ந்த படிப்புகளில் சேர்வதை உறுதி செய்திட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவியர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை தெரிந்துக்கொண்டு, அவர்களை படித்த பள்ளிகளுக்கு வரச்சொல்லி, எந்த எந்த பாடப்பிரிவுகளை படிக்க விரும்புகிறீர்கள் என்பதை கேட்டறிந்து அவர்களின் எண்ணத்திற்கேற்ப மேற்படிப்பு தொடர வழிகாட்டுதல் வேண்டும்.

மேலும் மேற்படிப்பு பயில உள்ள மாணவ மாணவியர்கள் தேசிய, மாநில அளவிலுள்ள அரசு கல்லூரிகளில் தற்போதே விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவப்படிப்பு மட்டும் நமது நோக்கம் அல்ல. கலை அறிவியல், சட்டத்துறை படிப்பு, பொறியியல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகள், செவிலியர் படிப்பு உள்ளிட்ட பட்டயப்படிப்புகளுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகம் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நன்றாக படிக்கும் 300 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மேற்படிப்பு படிக்க விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற மே மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே, மாணவர்களுக்கான உயர்கல்வி சார்ந்த முறையான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு அளிக்கப்படுவது அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர் வழிகாட்டி ஆசிரியரின் இன்றியமையாத கடமை. எனவே கல்லூரி கனவு போன்ற நிகழ்வுகள் மூலமும், கல்லூரிகள் சார்ந்த விவரங்களை மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமும், மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு தயார்படுத்திட வேண்டும்.

பெருவாரியான மாணவர்கள் பிற மாவட்ட மற்றும் மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொடர்ச்சியாக உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். மாணவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது மாவட்டங்களில் இயங்கும் முன்னோடி கல்லூரிகளில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான வாய்ப்பினை பெற்றிட வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகும். பெற்றொர்கள் தங்களுடைய பிள்ளைகளின் எண்ணங்களை கேட்கமால் வெளியூர்களில் மேற்படிப்பு படிக்க வைக்கிறார்கள். இந்த நாட்களில் மாணவர்கள் அடிப்படை தேவைகளை கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்த முடியாமால், மனஉளைச்சலுக்கு ஆளாகி, மேற்படிப்பை தொடரமால் முடியமால் இடைநிற்கின்றன. உள்ளுர் கல்லூரிகளில் பயிலும் போது விடுதி செலவுகள், பேருந்து கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை தவிர்த்து, கல்லூரி படிப்பை எளிதாக மேற்கொள்ள முடியும்.

எனவே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இதுபோன்ற நம்மிடம் இருக்கும் மாணவர்களுக்கு பெற்றோராக செயல்பட்டு சரியான உயர் கல்வி வழிகாட்டுதலை அனைத்து மாணவருக்கும் வழங்கிடுதல் நமது தலையாய பணியாகும். பன்னிரண்டாம் வகுப்பு படித்த எந்த ஒரு மாணவனும் உயர் கல்வியில் செல்ல முடியாத நிலை இயலாத வண்ணம் அனைவரும் இதில் தனிக் கவனம் செலுத்தி பணியாற்றுதல் வேண்டும். உயர்கல்வி பயில்வதற்கான குறிக்கோள் இன்றி இருக்கும் மாணவர்களை சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கான உரிய வழிகாட்டுதல் வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார். 

அதனைத்தொடர்ந்து தலைமையாசிரியர்களிடம் அவர்களது அனுபவ பகிர்வுகளை கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழிகாட்டுதல் கையேட்டினை வெளியீட்டு தலைமையாசிரியர்களிடம் வழங்கினார். இப்பயிற்சியில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு வட்டாரங்களை சார்ந்த 33 அரசு பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு 10 பேர் வீதம் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர், உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பள்ளி மேலாண்மை குழு துணத்தலைவர், முன்னாள் மாணவர்கள் ஐந்து பேர், கல்வியாளர் உள்ளிட்ட 10 பேர் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் கலந்துகொண்டு ஆக மொத்தம் 330 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, உதவி திட்ட அலுவலர் பிரபாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிகல்வி சாரதா, பள்ளி கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், முன்னாள் மாணவ மாணவியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், கல்வியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory