» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியிலிருந்து சென்னைக்கு 2வது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? எதிர்பார்ப்பில் மக்கள்

திங்கள் 7, ஏப்ரல் 2025 5:34:31 PM (IST)

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்துக்கு தினசரி இரவு நேர ரயில் சேவை பாரத பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. மதுரை- ராமேஸ்வரம் பாதை மீட்டர் கேஜ் இருப்பு பாதை அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயணிகள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. 2007 க்கு பிறகு இயங்கிய ரயில்கள் சேர்த்து ராமேஸ்வரம் சென்னை இடையே தற்போது மூன்று தினசரி ரயில்கள் இயங்கிவருகின்றது. 

இந்த மூன்று ரயில்களும் வேவ்வேறு மூன்று வழித்தடங்கள் வழியாக பயணம் செய்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டுக்குள் குறைந்தகாலஅளவிற்குள் சென்னைக்கு மூன்று தினசரி ரயில்கள் என்பது மிகவும் பெரிய சாதனை ஆகும். இனி ராமேஸ்வரம் - சென்னை மார்க்கத்தில் பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை.

தென் இந்திய அளவில் ராமேஸ்வரத்துக்கு அடுத்தப்படியாக ஆன்மீக பக்தர்கள் அதிகம் பக்தர்கள் செல்லும் இடம் கன்னியாகுமரி ஆகும். கன்னியாகுமரிக்கு 1979-ம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு நேரடியாக அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது. 

நீண்டகாலத்திற்கு பிறகு கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு 1994-ம் ஆண்டு நேரடியாக ரயில் மூலம் இணைக்கப்பட்டு அந்த ரயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஆரம்ப காலகட்டங்களில் சென்னை எழும்பூர் மார்க்கம் மீட்டர் கேஜ் இருந்த காரணத்தால் ஈரோடு வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. பின்னர் சென்னை எழும்பூர் - திருச்சி மார்க்கம் அகலபாதையாதாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு சென்னை எழும்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து ஒரே ஊருக்கு இரண்டு அல்லது மூன்று ரயில்கள் இயக்கப்படுவது சென்னை - மங்களுர் மார்க்கத்தில் தினசரி மூன்று இரவு நேர ரயில் ரயில்கள் சென்னை – திருவனந்தபுரம் மார்க்கத்தில் இரண்டு தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய நகரங்களான கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு கூட இன்னமும் இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படவில்லை. சென்னையிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரத்துக்கு மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுவது ராமேஸ்வரம் மட்டுமே ஆகும்.

கன்னியாகுமரிக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை:  கன்னியாகுமரி மாவட்டம் 18 லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். குமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் மாநில தலைமை செயலகம், சட்டமன்ற வளாகம், அண்ணா பல்கலைக்கழக, மருத்துவ பல்கலைக்கழகம் பல்வேறு மத்திய மாநில அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்து அலுவலகங்களும் சென்னையில் அமைந்துள்ளது. 

தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி சராசரியாக 1000 நபர்கள் பயணிக்கின்றனர். இதில் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் அடங்கும். தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து தலைநகர் சென்னைக்கு தனித்தனியாக தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் எல்லாம் அந்த பகுதி பயணிகள் சென்னைக்கு செல்ல பயனுள்ளதாக உள்ளது. 

ஆனால் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆன்மீக யாத்ரீகர்கள் இது இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் என அனைவரும் சென்னைக்கு செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை நம்பி உள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்கள் அதிக நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துவிடுவதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் குமரி மாவட்ட பயணிகளுக்கு முன்பதிவு கிடைப்பது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் குமரி மாவட்டத்திலிருந்து நமது மாநிலத்தின் தலைநகர் சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. இந்த நெருக்கடியை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிக லாப நோக்கத்துடன் குமரியில் இருந்து சென்னைக்கு தினசரி சுமார் 50 முதல் 100 தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்குகின்றனர். 

குமரி மாவட்ட மக்கள் தங்கள் தலைநகருக்கு தற்போது இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காத காரணத்தால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் ஆம்னி பேருந்துகளில் பாதுகாப்பின்றி அதிக தூரம் பயணம் செய்கின்றனர். இதிலும் குறிப்பாக வயதானோர், குடும்பத்துடன் குழந்தைகளுடன் பயணம் செய்வோர் மிகவும் பேருந்துகளில் அதிக தூரம் பயணம் செய்வதால் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

தற்போது குமரி மாவட்ட பயணிகள் சென்னைக்கு பயணம் செய்ய தற்போது உள்ள ரயில் சேவைகள்

1. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினசரி (1994)
2. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தினசரி 2005
3. நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயில் 2005
4. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் 2004
5. நாகர்கோவில் - குருவாயூர் 1994 (தற்போது சென்னை – குருவாயூர் )
6. நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா தினசரி 2019
7. நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மூன்று முறை 2019

கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல் தினசரி ரயில்

கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், சேலம் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி புதிய சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்க வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை ஆகும். இவ்வாறு தமிழகத்தின் கடைசி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினசரி ரயில் இயக்கும் போது சென்னை சென்ட்ரலிருந்து வட இந்திய நகரங்களுக்கு செல்லும் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இணைப்பு ரயிலாக இந்த ரயில் இருப்பதால் மிகவும் வசதியாக இருக்கும். சென்னை எழும்பூரிலிருந்து ஆட்டோ பிடித்து சென்ட்ரலுக்கு செல்ல தேவை இருக்காது.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரியிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிகமான மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, நோயாளிகள் என்று வேலூர் உள்ள சிஎம்.சி மருத்துவமனைக்கு தினசரி செல்கின்றனர். இந்த ரயில் இயக்கும் பட்சத்தில் இவ்வாறு மாவட்டத்திலிருந்து செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரயில்வேத்துறை வரலாற்றை நினைவுகளை சிறப்பிக்கும் விதமாகவும், இளம் தலைமுறையினர் அதன் முக்கிய பெயர்களை நினைவுபடுத்தும் விதமாகவும் இந்திய ரயில்வேத்துறை பல்வேறு ரயில்களுக்கு வரலாற்று பெயர்களை சூட்டி இயக்கி வருகிறது. இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பெயர்களை கொண்ட அநேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க பெயர்களை கொண்ட ரயில்கள் இயக்கபடவில்லை. இது கன்னியாகுமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சேர நாட்டின் தென் பகுதியில் ஆய்நாடு, வேணாடு, நாஞ்சில் நாடு, இடை நாடு என்று அழைக்கப்பட்டது. ஆகவே இந்த ரயிலுக்கு கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் அழைக்கப்பட்ட இடைநாடு எக்ஸ்பிரஸ் ரயில் அல்லது ஆய்நாடு எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டி இயக்க வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory