» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் தென்பட்ட முழு சூரிய கிரகணம்: பல கோடி மக்கள் கண்டு ரசித்தனர்

புதன் 10, ஏப்ரல் 2024 8:37:20 AM (IST)



வட அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தென்பட்டது. இதை பல கோடி மக்கள் கண்டு ரசித்தனர்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் நிலவு தனது பாதையில் பயணிக்கும்போது சூரியனை நிலவு மறைப்பது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணம் ஓராண்டில் இருமுறை தான் நிகழும். ஆனால், இருமுறையும் முழு சூரிய கிரகணமாக இருக்குமா என்பதை சொல்ல முடியாது. எனவே, முழு சூரிய கிரகணம் அரிது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மற்றும் முழு சூரிய கிரகண நிகழ்வு நேற்று முன்தினம் நிகழ்ந்தது. இந்த முழு சூரிய கிரகண நிகழ்வு வடஅமெரிக்காவில் தென்பட்டது. இது முதன்முதலில் மெக்சிகோவின் மசாட்லான் நகரத்துக்கு அருகில், இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு சுமார் 11.40 மணிக்குத் தென்பட்டது. அங்கு 4 நிமிடங்களுக்கும் மேலாக கிரகணம் நீடித்தது.

அதன்பின்னர் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த முழு சூரிய கிரகணம் கென்டக்கி, இன்டியானா, ஓகியோ உள்பட 15 மாகாணங்கள் வழியாக பயணித்து அண்டை நாடான கனடாவுக்குள் நுழைந்தது.

கிரகணம் தென்பட்ட மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகளிலும் பல கோடி மக்கள் பொது வெளிகளில் கூடி, ஆரவாரத்துடன் அதனைக் கண்டுகளித்தனர். முதலில் நிலாவின் விளிம்பு சூரியனைத் தொடுவதுபோலத் தோன்றியது. தொடர்ந்து நிலா சூரியனை முழுவதுமாக மறைத்தது. கிரகணத்தின் உச்சத்தில், முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலாவின் விளிம்பைச் சுற்றியும் சூரியனின் ஒளிவட்டம் மட்டுமே தென்பட்டது.

கிரகணத்தின்போது பட்டப்பகலில் நட்சத்திரங்கள் தென்பட்டன. மக்கள் அவற்றை ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆனால் பல அமெரிக்க நகரங்களில் முழு சூரிய கிரகணம் தென்படவில்லை. இருந்தும் இந்த வானியல் நிகழ்வு ஆச்சரியமூட்டுவதாக அமைந்தது.

உதாரணமாக நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மாடியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்களுக்குப் பிறைபோன்ற பகுதி சூரியகிரகணம் தென்பட்டது. நயாகரா நீர்விழ்ச்சி இருக்கும் அமெரிக்க-கனடா எல்லையின் இருபுறமும் மக்கள் கிரகணத்தைக் காணக் குவிந்திருந்தனர். 

இப்பகுதியில் வானிலை மோசமாக இருந்தாலும், முழு கிரகணத்தின் வேளையில் மேகமூட்டம் விலகி, வானியல் நிகழ்வைக் காணமுடிந்தது. முழு கிரகணம், கனடாவின் கிழக்கு கடற்கரையான நியூபவுண்ட்லேண்டின் போகோ தீவில் இறுதியாகத் தென்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory