» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் 10 ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி: புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்பு!

திங்கள் 18, மே 2026 12:34:51 PM (IST)



கேரளத்தின் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன் பதவியேற்றார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

கேரள மாநிலத்தின் 13-ஆவது புதிய முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீசன் (வயது 61) இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 20 புதிய அமைச்சர்களும் தங்களது பதவிப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி முன்னணியின் ஆட்சி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.

தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10:15 மணியளவில் பதவியேற்பு விழா மிக எழுச்சியுடன் தொடங்கியது. விழா மேடையில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு கேரள மாநில ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், புதிய முதல்வர் வி.டி.சதீசனுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 

கடவுளின் பெயரால் வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பிரமாணம் எடுத்தபோது மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுற்றது.

20 அமைச்சர்கள் பதவியேற்பு

முதலமைச்சர் வி.டி.சதீசனைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 20 புதிய அமைச்சர்களும் வரிசையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கியக் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆர்.எஸ்.பி., சி.எம்.பி. ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். 

இதில் ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், பி.கே.குஞ்ஞாலிக்குட்டி போன்ற மூத்த தலைவர்களுடன் சேர்த்து மொத்தம் 14 புதுமுகங்களுக்கு இந்த அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. பிரியங்கா காந்தி, ஏஐசிசி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவர்களுடன், பதவியை நிறைவு செய்யும் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் மற்றும் கேரள மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் விபரங்களுடன் ஏராளமான அரசியல் பிரமுகர்களும், தொண்டர்களும் இந்த விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்றனர். புதியதாகப் பொறுப்பேற்றுள்ள வி.டி.சதீசன் தலைமையிலான அரசுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory