» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஐ.டி ரெய்டின் போது பயங்கரம்!

சனி 31, ஜனவரி 2026 11:44:42 AM (IST)

பெங்களூருவில் வருமான வரித்துறை சோதனையின் போது பிரபல தொழிலதிபர் சிஜே ராய், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/BusinessmanSuic_1769840165.jpgகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சி.ஜே.ராய் பெங்களூருவில் கான்ஃபிடன்ட் குழுமம் என்ற பெயரில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். சில மலையாள திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார். இவர், ஸ்லோவாக் குடியரசு நாட்டின் கவுரவ துணை தூதராகவும் இருந்து வந்தார்.

பெங்களூரு ரிச்மண்ட் சாலையில் உள்ள இவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பல ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக சி.ஜே.ராயிடம் அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் துருவி, துருவி கேள்விகள் கேட்டதாக தெரிகிறது. ஒரு புறம் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், தனது அறையில் இருந்த சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். 

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால் போலீசார் தரப்பில் தற்கொலை என்று உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. 

சி.ஜே.ராயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்து, போலீசார் விசாரணையும் முடிந்தால் தான் மரணத்தின் பின்னணி குறித்த மற்ற விவரங்கள் தெரியவரும் என்றனர். சி.ஜே.ராய் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை உடனடியாக முடித்துக்கொண்டு அதுவரை கிடைத்த ஆவணங்களை 2 கார்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.

நடிகர் மோகன்லால் இரங்கல் 

சிஜேராய் மறைவுக்கு நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கள் உறவு நட்புக்கு அப்பாற்பட்டது என்றும், அந்த இழப்பை இன்னும் நம்ப முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் மோகன்லால் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் ராய். மோகன்லால் நடித்த காஸநோவா படத்தின் மூலம் அவர் திரைப்படத் தயாரிப்பில் நுழைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்ட நாளிலேயே அவர் சமீபத்தில் தயாரித்த படம் வெளியிட திட்டமிடப்பட்டது. பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட அனோமியின் இணை தயாரிப்பாளராகவும் சி ஜே ராய் இருந்தார். காஸநோவாவைத் தொடர்ந்து, மரக்கர்: லயன் ஆஃப் தி அரேபியன் சீ, சுரேஷ் கோபி நடித்த மெய் ஹூம் மூசா மற்றும் ஐடென்டிட்டி போன்ற மலையாளப் படங்களைத் தயாரித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory