» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

செவ்வாய் 20, ஜனவரி 2026 3:31:57 PM (IST)


பாஜக தேசிய தலைவராக அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக இருந்த நிதின் நபின் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர் தேர்தல் செயல்முறை ஜனவரி 16 அன்று அறிவிக்கப்பட்டது. கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி. நட்டா, நிதின் நபினுக்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் கே.லக்ஷ்மண் இன்று முறைப்படி அறிவித்தார். 

மேலும், அதற்கான சான்றிதழையும் நிதின் நபினிடம் அவர் வழங்கினார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பெருமளவில் கட்சித் தலைமையகத்தில் திரண்டிருந்தனர்.

இதையடுத்துப் பேசிய விடைபெறும் தலைவரான ஜே.பி. நட்டா, ‘‘உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவின் தேசியத் தலைவராக இளமையும், துடிப்பும், திறமையும் நிறைந்த நிதின் நபின் பொறுப்பேற்கும் இன்றைய தினம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். எனது சார்பாகவும், லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் சார்பாகவும், நான் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன்மையாக கட்சித் தொண்டரான நிதின் நபின், முதிர்ந்த சித்தாந்த பின்னணியைக் கொண்டவர். மிக இளம் வயதிலேயே ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியுள்ளார். தற்போதும் எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றி வருகிறார். பிஹார் அரசாங்கத்தில் பல முறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 

கட்சியின் இளைஞரணியின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து, நாடு முழுவதும் பயணம் செய்து முழு நாட்டையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். சிக்கிம் மற்றும் சத்தீஸ்கரின் பொறுப்பாளராக இருந்த அவர், அங்கு பாஜக அரசை கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

கட்சியில் இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொலைநோக்குப் பார்வையை வழங்கியதற்காகவும், இந்தப் பணியை நிறைவேற்ற உதவியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டின் பிரதமராக மிகவும் பரபரப்பாகவும் இருந்தபோதிலும், சிறிய விஷயங்களில்கூட கவனம் செலுத்தி கட்சியின் முன்னேற்றத்திற்கு அவர் அளித்த பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’’ என தெரிவித்தார்.

பாஜக தேசிய தலைவர் பொறுப்பை ஏற்கும் முன்பாக, டெல்லியில் உள்ள குருத்வாரா ஸ்ரீ பங்களா சாஹிப், ஜான்டேவாலன் தேவி கோயில், ஹனுமான் கோயில் ஆகியவற்றுக்குச் சென்று நிதின் நபின் வழிபாடு மேற்கொண்டார். கட்சித் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு தலைவர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory