» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)
கேரளத்தில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அடுத்த அத்தாணி பகுதியில் கடந்த 2017 பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்றுள்ளார். பின்னால் காரில் வந்த ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள், கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்து நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை அளித்த புகாரின்பேரில், கேரள மாநில குற்றப் புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தினர். பல்சர் சுனி என்ற சுனில் குமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபோது பல்சர் சுனி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார்.
நடிகையுடன் ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக, திலீப் சதித்திட்டம் தீட்டி கும்பலை ஏவி, நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. திலீப் கைதுசெய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, நடிகர் திலீப், பல்சர் சுனி உட்பட மொத்தம் 9 பேர் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
மலையாள நடிகை காவ்யா மாதவன் - திலீப் இடையிலான உறவு குறித்து திலீப்பின் மனைவியான மஞ்சு வாரியரிடம் இன்னொரு நடிகை கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மஞ்சு வாரியர், திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். மனைவி பிரிந்ததற்கு அந்த நடிகைதான் காரணம் என்று கருதிய திலீப், கூலிப்படையை பயன்படுத்தி அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
பல்சர் சுனி இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் போலீஸார் பதிவு செய்திருந்தனர் எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை சுமார் 8 ஆண்டுகளாக நடந்தது. விசாரணையின்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான 28 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறினர்.
நடிகர் திலீப் விடுதலை: வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் கடந்த டிச.8-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை நீதிபதி விடுதலை செய்தார். திலீப்பின் நண்பர் சரத், மேஸ்திரி சனில் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பல்சர் சுனி, மார்ட்டின் ஆன்டனி, பி.மணிகண்டன், பிரதீப், விஜேஷ், வடிவால் சலீம் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 6 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் நேற்று அறிவித்தார். இதையொட்டி, குற்றவாளிகள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அப்பாவிகள்’ என்று பலவித காரணங்களைக் கூறி நீதிமன்றம்தங்களை மன்னிக்குமாறு 6 பேரும் கோரினர். ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஜாக்குமார் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ‘‘இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது. நீதிமன்றம் அளிக்கும் தண்டனை, இந்த சமூகத்துக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, தீர்ப்பு விவரங்களை நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் அறிவித்தார். ‘‘சதித் திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் குற்றங்களுக்கு சமமாகப் பொறுப்பேற்கின்றனர். எனினும், பல்சர் சுனி மட்டுமே உண்மையில் பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற உண்மையை கணக்கில் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்த நீதிபதி, 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாலியல் கூட்டுவன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)

பனிமூட்டத்தால் விமானம் ரத்தானால் கட்டணம் திருப்பி செலுத்தப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:36:29 PM (IST)


.gif)