» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

திங்கள் 8, டிசம்பர் 2025 8:44:00 AM (IST)



கோவா இரவு விடுதியில் நடந்த தீவிபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவா மாநிலத்தின் வடபகுதியில் அர்போரா கிராமத்தில் ‘ரோமியோ லேன்’ என்ற இரவு விடுதி உள்ளது. தலைநகர் பனாஜியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். அதற்குள் தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் சமையல் கூட ஊழியர்கள் ஆவர். 3 பெண்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்த் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பலியானவர்களில் 3 அல்லது 4 பேர் சுற்றுலா பயணிகள் ஆவர். பலியானோரில் 3 பேர் மட்டும் தீக்காயத்தால் இறந்துள்ளனர். மற்றவர்கள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.சுற்றுலா பருவம் உச்சத்தில் இருக்கும்போது இத்தகைய விபத்து நடந்தது துரதிருஷ்டவசமானது. முதல்கட்ட தகவலின்படி, தீதடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை இரவு விடுதி நிர்வாகம் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது. விடுதி நிர்வாகம் மீதும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக கோவா போலீஸ்துறை தலைவர் அலோக் குமார் தெரிவித்தார். உள்ளூர் பா.ஜனதா எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ கூறுகையில், ‘‘இத்தகைய விபத்து மீண்டும் நடக்காதவகையில், அனைத்து இரவு விடுதிகளிலும் அதிகாரிகள் தீதடுப்பு பாதுகாப்பு ஆய்வு நடத்துவார்கள். பஞ்சாயத்து நிர்வாகம், அனைத்து இரவு விடுதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பும், உரிய அனுமதி இல்லாத இரவு விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

தீவிபத்து குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்தை பிரதமர் மோடி ெதாலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமையை கேட்டறிந்தார். பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory