» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 12:10:50 PM (IST)
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசத்தை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அக்டோபர் 27-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
நவ.4-ல் பணி தொடங்கியது: மேற்கண்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. 12 மாநிலங்களில் உள்ள 321 மாவட்டங்கள், 1,843 சட்டப்பேரவை தொகுதிகளில் இருக்கும் 51 கோடி வாக்காளர்கள் இந்த பணியின் போது சரிபார்க்கப்படுகின்றனர். இந்த பணிகளை டிச.4-ம் தேதிக்குள் முடிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்க 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகள் சார்பில் 2.39 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ) நிய மிக்கப்பட்டு, பிஎல்ஓக்களுக்கு அவர்கள் உதவி வருகின்றனர்.
இதுவரை 6.33 கோடி படிவங்கள் (98 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் 5.61 கோடி (87 சதவீதம்) வாக்காளர்களிடம் இருந்து படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தேர்தல் பணி, மழை நிவாரணப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் வருவாய்த் துறை அலுவலர்கள், பிஎல்ஓக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினரும், எஸ்ஐஆர் பணிக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதேபோல, கேரள மாநில அரசு ஊழியர்களும் காலநீட்டிப்பு கோரியிருந்தனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், எஸ்ஐஆர் பிரச்சினை குறித்து, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குரல் எழுப்புமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தனர்.
அப்போது, ‘‘மேற்கு வங்கத்தில் கடும் பணிச் சுமையால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) மன அழுத்தத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, போதிய பயிற்சி வழங்கி சரியான முறையில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு காலநீட்டிப்பு வழங்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆர் பணிகளை முடிப்பதற்கான அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணிகளும் அன்றே நடைபெற உள்ளது. டிச.12 முதல் 15-ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
எஸ்ஐஆர் பணி, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி, எஸ்ஐஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அதன் மீது ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான காலக்கெடு டிச.16 முதல் ஜன.15 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இந்த அறிவிப்பை தமிழக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேஷனல் ஹெரால்டு பண மோசடி விவகாரம் : சோனியா, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு பதிவு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:47:46 AM (IST)

காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:40:41 AM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மழை, வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
வெள்ளி 28, நவம்பர் 2025 5:05:40 PM (IST)

எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 அதிகாரிகள் மரணம்: தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:15:36 PM (IST)


.gif)