» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடரலாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 11, நவம்பர் 2025 5:02:51 PM (IST)



தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதோடு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றங்கள் விசாரணை நடத்தக் கூடாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து மனுக்களின் நகல்களை தேர்தல் ஆணைய வழக்குரைருக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேவேளையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடரலாம் என்றும் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தமிழ்நாட்டில் தற்போது மழைக்காலம் நிலவுகிறது. மழைக் காலத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் பண்டிகைக் காலம் என்பதால், மக்களால் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் இணைய சேவை இல்லாத சூழலில், எஸ்ஐஆர் பணிகளில் தாமதம் ஏற்படும். தமிழ்நாட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மழைத் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால், எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று வாதிட்டார்.

தொடர்ந்து திமுக தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் அவசர கதியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. பிகாரில் நடத்தியதைப் போல தமிழ்நாட்டில் எப்படி நடத்த முடியும்? இரண்டிலும் வெவ்வேறு சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் அவசரகதியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டால், ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை பாதிக்கப்படுகிறது என்று திமுக தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடரலாம் என்று உத்தரவிட்டதோடு, இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, அடுத்த வழக்கு விசாரணையை நவ. 26க்கு ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory