» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

வியாழன் 11, செப்டம்பர் 2025 4:58:30 PM (IST)



ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்ட மாணவர்கள் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை (14-ம் தேதி) அன்று நடைபெற உள்ள நிலையில் இதனை அவசர வழக்காக எடுத்து கொண்டு நாளையே விசாரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர். 

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது திட்டமிட்ட படி நடைபெறும் என்று தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory