» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி

வியாழன் 18, டிசம்பர் 2025 3:51:31 PM (IST)

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பெயர் வைப்பது ஏன்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "இது வளர்ச்சி பாரதம் இல்லை விபரீத பாரதம். இது விக்சித் பாரத் மசோதா அல்ல விரக்தி பாரத்” என விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, மத்திய அரசின் 125 நாள் வேலைக்கான ரோஜ்கர்-அஜிவீகா திட்ட மசோதா மீதான விவாதம் நடந்தது. இந்த தீர்மானம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

இது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம். தொழிலாளர் விரோத அரசு. தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கிறோம். இது தொழிலாளர் விரோத அரசு. பழைய 100 நாள் வேலை திட்டத்தின் பெயரிலேயே வேலைக்கு உறுதி இருந்தது. ஆனால் நீங்கள் தற்போது தாக்கல் செய்துள்ள இந்த மசோதா அப்படி அல்ல. அதிகாரத்தை மத்திய அரசின் கையில் கொடுக்கக்கூடியதாக மாற்றப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மசோதாவில் நிதி பங்கீட்டை 60-க்கு 40 என்ற விகிதாச்சாரத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மாநிலங்களாகிய நாங்கள் 61 சதவீதத்தை நாங்கள்தான் கொடுக்கிறோம். மத்திய அரசு 39 சதவீதம்தான் தருகிறது. பல திட்டங்களில் இப்படித்தான். பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 100 நாட்களுக்கு பதிலாக 125 நாள் வேலை உண்டு என்று சொல்கிறீர்கள். ஆனால் பழைய திட்டத்தில் நீங்கள் எந்த ஆண்டிலாவது 100 நாள் வேலையை முழுமையாக கொடுத்து இருக்கிறீர்களா?.

நீங்கள் (மத்திய அரசு) வைக்கிற திட்டங்கள் எல்லாவற்றின் பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே இருக்கிறது. ஏதாவது ஒரு மசோதாவின் (திட்டம்) பெயர் கூட தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது மராத்தி பொன்ற வேறு பிராந்திய மொழிகளில் வைக்கப்படுவதில்லை ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory