» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)



துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கோவையைச் சேர்ந்த மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில் நேற்று அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜூ, எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி, கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்து பேசும்போது, "சி.பி.ராதாகிருஷ்ணன் பண்பானவர், பணிவானவர். எந்த சர்ச்சைக்கும் ஆளாகாதவர். ஊழல்கறை இல்லாதவர். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர். எனவே அவரை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவருக்கு ஆதரவு வழங்கக்கோரி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைவரிடமும் பேசி வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory