» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 12:27:36 PM (IST)



தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தற்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் நடைபெற்று வருவதால், அங்கேயும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்குகள் திருட்டு என்று கூறி தேர்தல் ஆணையம் மீதும், மத்திய பா.ஜ.க. அரசு மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, "வாக்குகள் திருட்டு என்று சொல்வது அடிப்படை இல்லாதது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டு அஞ்சமாட்டோம். இத்தகைய குற்றச்சாட்டு சொல்பவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே நேரத்தில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல் வாக்காளர் திருத்த பட்டியல் விவகாரத்தை முன்வைத்து மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory