» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது: டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி!

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 11:56:41 AM (IST)

விவசாயிகளின் நலன்களின் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

டெல்லியில் மறைந்த புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மூன்று நாள்கள் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், ”இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.

இதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியாவும் அதற்குத் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை வெளிப்படையாக பிரதமர் மோடி குறிப்பிடவில்லை.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வதால், இந்திய பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டார்.

இதனிடையே, அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி ஆகியவற்றை அதிகளவில் அணுகும் வகையிலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் ஒப்பந்தத்தில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை ஏற்க இந்தியா மறுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனிடையேதான் இந்தியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் அதிகளவில் வரியை விதித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பல்வேறு வகையான வேளாண் பொருள்களும் பால் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால், வேளாண் துறையும் கடுமையாக பாதிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory