» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 4:14:11 PM (IST)



டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறையில் முறைகேடாக ஆள்களை சேர்த்தல், நிதி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. 'விசாரணையில் எந்த குற்றச் செயலோ அல்லது அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களோ நிரூபிக்கப்படவில்லை' என்று இதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ கோரியுள்ளதாகவும் நீதிபதி திக் வினய் சிங் கூறினார்.

பண ஆதாயம், சதி அல்லது ஊழல் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை என்றும் ஏதேனும் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், இந்த வழக்கை மேலும் விசாரிக்க சிபிஐக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் கூறிய நீதிபதி, சிபிஐ-யின் இறுதி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்தார்.

மேலும், ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு வெறும் சந்தேகம் மட்டும் போதாது; குறைந்தபட்சம் ஆதாரம் வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது பாஜக பொய்யான வழக்குகளை சுமத்துவதாகவும் இந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளால் ஏற்படும் மன உளைச்சலுக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்? என்றும் ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், "எங்கள் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. இதேபோன்று காலப்போக்கில் எல்லா வழக்குகளிலும் உண்மை வெளிப்படும். எங்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.

இந்த பொய்யான வழக்குகளைப் பதிவு செய்த அனைவரையும் இந்தப் பொய்யான வழக்குகளை போடச் செய்த தலைவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டாமா? இரவும் பகலும் எங்கள் மீது சேற்றை வீசினார்கள். எங்கள் குடும்பங்கள் எவ்வளவு வேதனையைத் தாங்க வேண்டியிருந்தது?அதற்கெல்லாம் இழப்பீடு என்ன?

அவர்கள் எங்கள் மீது போலியான வழக்குகளைப் பதிவு செய்தார்கள். எங்களை சிறைக்கு அனுப்பினார்கள், இப்போது வழக்கை முடித்துவைக்கிறார்கள்.. இதுதான் நீதியா?" என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலரும் விசாரணை அமைப்புகளையும் பாஜக அரசையும் கடுமையாக சாடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory