» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆளுநர் விவகாரம்: ஜனாதிபதியின் கேள்விகளுக்கு மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

செவ்வாய் 22, ஜூலை 2025 12:01:49 PM (IST)

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும்  அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலம் கிடப்பில் போட்டு இருந்தார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

அதன்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்துக்குள்ளும், ஆளுநர் அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தது. மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநருக்கு தனியுரிமை கிடையாது என்றும், மந்திரி சபையின் ஆலோசனையின்பேரில் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் கூறியது.

ஆளுநர் அனுப்பிவைத்த மசோதா மீது ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டால், மாநில அரசுகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதா மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது இதுவே முதல்முறை ஆகும்.

இதற்கிடையே இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனக்குரிய சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி, உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை விடுத்திருந்தார். ஜனாதிபதி எழுப்பியிருந்த 14 கேள்விகள் விவரம்,

1. ஒரு மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.

2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் ஆளுநர் பயன்படுத்தும்போது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?.

3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், ஆளுநரின் தனியுரிமை என்பது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதா?.

4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.

5. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதா?.

7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

8. ஜனாதிபதியின் அனுமதிக்காக ஆளுநர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.

9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, ஆளுநரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து நீதிமன்ற விசாரிக்க அனுமதி உள்ளதா?.

10. ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.

11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.

12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.

13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.

14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?. மேற்கண்ட கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் மத்திய அரசு ஜனாதிபதி மூலமாக உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்பதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கிடையே 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 22-ந் தேதி விசாரணை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு ஆணையிட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory