» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

வியாழன் 8, ஆகஸ்ட் 2024 11:19:04 AM (IST)

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்ட அவர், ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 9-வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (ஆகஸ்ட்.8) வெளியிட்டார்.

பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். ஆனால் தொடர்ந்து 9-வது முறையாக ரெப்போ வட்டி மாற்றப்படாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையவும் செய்யாது. இவ்வாறாக நீண்ட காலமாக வீடு, வாகனங்களுக்கான வட்டி குறையாமல் இருப்பதும் ஒருவகையில் சாமானிய மக்களுக்கு சுமைதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட்டி விகிதம் மாற்றப்படாதது ஏன்?- ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததற்கு நாட்டின் உணவுப் பணவீக்கமும் அதன் நீட்சியாக ஒட்டுமொத்த பணவீக்கமும் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிர்ணயித்த வரம்புக்குள் வராததே காரணம் எனக் கூறப்படுகிறது. காய்கறி தொடங்கி பருப்பு வகைகள் வரை உணவுப் பணவீக்கம் தொடர்ந்து குறையாமல் இருக்கிறது. இந்நிலையில் தான் ரிசர்வ் வங்கி நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் 6-ல் 4 உறுப்பினர்கள் வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என்று வாக்களிக்க ரெப்போவில் மாற்றம் செய்யப்படவில்லை.

"பொருளாதாரம் மற்றும் நிதிச் சூழல்களைக் கணக்கில் கொண்டே ரெப்போ வட்டி விகிதத்தை அதே 6.5% என்றளவில் தொடர்கிறது” என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதேபோல் அமெரிக்க பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஆகியனவற்றையும் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5% ஆக இருக்கும் என்றும், ஜிடிபி 7.2% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory