» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்த ஆர்சிபி அணி!
திங்கள் 1, ஜூன் 2026 12:32:33 PM (IST)

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
இதன் மூலம் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்த 3-வது அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது. சாம்பியன் வென்ற ஆர்சிபி அணிக்கு ரூ. 20 கோடி பரிசு வழங்கப்பட்டது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதாரின் முடிவிற்கு ஏற்ப பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில் (10 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (12 ரன்கள்) ஆகியோரை வீழ்த்தி குஜராத் அணிக்கு முட்டுக்கட்டை போட்டனர. நடுவரிசையிலும் இறுதி ஓவர்களிலும் ஆர்சிபி தரப்பில் மிகச்சிறப்பாகப் பந்துவீசிய ரஷிக் சலாம் 4 ஓவர்களில் வெறும் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் (நிஷாந்த் சிந்து 20, ராகுல் டெவாட்டியா 7, ரஷித் கான் 7) கைப்பற்றி அசத்தினார்.
குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே பொறுப்பாக விளையாடி அரைசதம் (50 ரன்கள்) அடித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 156 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி ஜோடி அதிரடியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
காகிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 70 ரன்களைக் குவித்தது. வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
நடுவரிசையில் ரஷித் கான் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை (ரஜத் பட்டிதார் 15, கிருணல் பாண்டியா 1) வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார். எனினும், மறுமுனையில் தூணாக நின்ற விராட் கோலி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். டிம் டேவிட்டின் (24 ரன்கள்) பொறுப்பான ஒத்துழைப்புடன் களம் நின்ற கோலி, 25 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார்.
அர்ஷத் கான் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கும், கடைசி பந்தை சிக்ஸருக்கும் பறக்கவிட்டு விராட் கோலி ஆர்சிபி அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களும், ஜிதேஷ் சர்மா 11 ரன்களும் குவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுப்மன் கில் அபார சதம்: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
சனி 30, மே 2026 11:20:46 AM (IST)

மாநில கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: சார் ஆட்சியர் சுழற்கோப்பையை வழங்கினார்!
வெள்ளி 29, மே 2026 8:40:23 AM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி: வெளியேறியது ஐதராபாத் அணி!
வியாழன் 28, மே 2026 11:29:13 AM (IST)

ஐபிஎல் பிளேஆஃபில் ஆர்சிபி இமாலய சாதனை: ரஜத் பட்டிதார் 93 ரன்கள் குவித்து அசத்தல்!
புதன் 27, மே 2026 11:32:43 AM (IST)

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி: லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு, பெங்களூரு அணிகள் அதிரடி வெற்றி!
செவ்வாய் 26, மே 2026 9:07:18 AM (IST)

மாநில கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தி காயல்பட்டினம் அணி அரையிறுதிக்கு தகுதி!
திங்கள் 25, மே 2026 8:50:39 AM (IST)


