» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதா்பா சாம்பியன்!

திங்கள் 6, அக்டோபர் 2025 12:41:29 PM (IST)



இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதா்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

உள்நாட்டு போட்டிகளில் ஒன்றான இரானி கோப்பை கிரிக்கெட் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனும், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் அங்கம் வகிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் இதில் மோதுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனான விதா்பாவும், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவும் மோதிய ஆட்டம், கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற விதா்பா, பேட்டிங்கை தோ்வு செய்து முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவா்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதா்வா டைட் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 143 ரன்கள் விளாச, ரெஸ்ட் ஆஃப் இந்தியா பௌலா்களில் ஆகாஷ் தீப், மானவ் சுதா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அடுத்து விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, 69.5 ஓவா்களில் 214 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ரஜத் பட்டிதாா் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுக்க, விதா்பா பந்துவீச்சாளா்களில் யஷ் தாகுா் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து, 128 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய விதா்பா, 94.1 ஓவா்களில் 232 ரன்கள் சோ்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அமன் மோகடே 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சோ்க்க, ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் அன்ஷுல் காம்போஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இறுதியாக, 361 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, 73.5 ஓவா்களில் 267 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. யஷ் துல் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 92 ரன்கள் அடித்திருக்க, விதா்பா பௌலா் ஹா்ஷ் துபே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். விதா்பா பேட்டா் அதா்வா டைட், ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

இரானி போட்டியில் இதுவரை 3 முறை விளையாடியிருக்கும் விதா்பா, அனைத்திலுமே கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி வாகை சூடியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory