» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

திங்கள் 6, அக்டோபர் 2025 8:29:53 AM (IST)



கொழும்பில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் ெகாழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் உடல்நலக்குறைவு காரணமாக ஆல்-ரவுண்டர் அமன்ஜோத் கவுர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா ஈரப்பதமான ஆடுகளத்தை மனதில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ஸ்மிர்தி மந்தனாவும், பிரதிகா ராவலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். பிரதிகா ராவல், வேகப்பந்து வீச்சாளர் டயானா பெய்க்கின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டார். ஸ்கோர் 48-ஆக உயர்ந்த போது மந்தனா (23 ரன், 32 பந்து, 4 பவுண்டரி) பாத்திமா சனாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து ஹர்லீன் தியோல் வந்தார்.

சுழல், வேகம் என பாகிஸ்தான் பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் இந்தியாவின் ரன்வேகம் தளர்ந்ததுடன் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டும் விழுந்தன. பிரதிகா ராவல் 31 ரன்னிலும் (37 பந்து, 5 பவுண்டரி) அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்னிலும் வெளியேறினர்.

4-வது விக்கெட்டுக்கு தியோலுடன், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்தார். ஜெமிமாவுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. 2 ரன்னில் கேட்ச் ஆனார். பிறகு அது நோ-பால் என தெரிந்ததால் மறுவாழ்வு பெற்றார். இதன் மூலம் மேற்கொண்டு 8 ஓவர்கள் தாக்குப்பிடித்தார்.

அணியின் ஸ்கோர் 151-ஐ (33.1 ஓவர்) எட்டிய போது ஹர்லீன் தியோல் 46 ரன்னில் (65 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ஜெமிமா ரோட்ரிக்சும் (32 ரன், 37 பந்து, 5 பவுண்டரி) நடையை கட்டினார். இதனால் இந்தியாவின் ரன்ரேட் மேலும் குறைந்தது. பந்து எல்லைக்கோடு பக்கம் செல்வதே அரிதானது. அதாவது 35 முதல் 46 ஓவர்கள் வரை நமது வீராங்கனைகள் வெறும் 3 பவுண்டரி மட்டுமே அடித்தனர். இடையில், சினே ராணா (20 ரன்), தீப்தி ஷர்மாவும் (25 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடைசி கட்டத்தில் விக்கெட்கீப்பர் ரிச்சா கோஷ் அணிக்கு புத்துயிர் ஊட்டினார். பவுண்டரி, சிக்சர்கள் விரட்டிய அவர் அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரிச்சா கோஷ் 35 ரன்களுடன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 4 ஓவர்களில் இந்திய பேட்டர்கள் 44 ரன்கள் திரட்டினர். பாகிஸ்தான் தரப்பில் டயானா பெய்க் 4 விக்கெட்டும், சாதியா இக்பால், பாத்திமா சனா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. பாகிஸ்தான் அணியில், சிட்ரா அமின் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 81, நடாலியா பர்வேஸ் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் அடித்து வெற்றிக்காக முயற்சித்து பெவிலியன் திரும்பினர். முனீபா அலி 2, சடாஃப் ஷமாஸ் 6, ஆலியா ரியாஸ் 2, கேப்டன் ஃபாத்திமா சனா 2, சிட்ரா நவாஸ் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ரமீன் ஷமிம் 0, டயானா பெய்க் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, சாடியா இக்பால் ரன்னின்றி வீழ்ந்தார். கடைசி வீராங்கனையாக நஷ்ரா சாந்து 2 ரன்களுடன் களத்தில் நின்றார்.இந்திய பௌலர்களில் கிராந்தி கௌட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3, ஸ்நேஹா ராணா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். 20 ரன்களே கொடுத்த கிராந்தி கௌட் ஆட்டநாயகி ஆனார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory