» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:05:53 AM (IST)

MariawilsonAssemb.jpg


‘நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நான் அப்படித்தான் பேசுவேன்' என்று தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் ஆவேசமாக பதிலளித்தார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் (தி.மு.க.) பங்கேற்று பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ராஜேந்திரன்:- சட்டசபையில் நிதி அமைச்சர் உரையாற்றியபோது, நான் ஒரு சொற்பொழிவாளன் என்ற முறையிலும், தமிழ் ஆர்வலன் என்ற முறையிலும், அவர் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். அவர் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் அதே நேரத்தில், அவர் தமிழிலும் தன்னுடைய உரையை சிறப்பாக ஆற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.

சபாநாயகர்:- நிதித்துறை அமைச்சரை தமிழில் பேச வேண்டும், தூய தமிழில் பேச வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால், நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். குறைந்தபட்சம் 9 முறையாவது நீங்கள் 'பட்ஜெட், பட்ஜெட்' என்று ஆங்கிலத்தில் சொன்னீர்கள். தமிழில் அதை நிதிநிலை அறிக்கை என்று சொல்லலாம்.

ராஜேந்திரன்:- நீங்கள் நேரக் கட்டுப்பாட்டை வைத்திருப்பதால், விரைவாக பேசி முடிக்க வேண்டும் என்பதற்காக நானும் என்னுடைய பேச்சைச் சுருக்கி, வேகமாகப் பேசுகிறேன்.

அமைச்சர் ராஜ்மோகன்:- ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கென்று ஒரு இயல்பான பேச்சுத் தமிழ் இருக்கிறது. நிதியமைச்சர் என்னிடம் தமிழ் வகுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ராஜேந்திரன் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவர் சங்கத் தமிழிலா பேசுகிறார்? இயல்பாகத்தானே பேசுகிறார்.

அமைச்சர் மரிய வில்சன்:- கடந்த 30 முதல் 35 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய தொடர்புகள், பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கிறது.

இப்போது இந்த சட்டமன்றத்தில் கொஞ்சம் காலமாக உருவகேலி செய்வது, சாதி, பெண்கள் தொடர்பாக பேசுவது, இப்போது மொழியை வைத்து விமர்சனங்கள் செய்வது நடக்கிறது. எனக்கு ஒரு மொழியை என்னுடைய கிறிஸ்தவம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அது அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி. அந்த மொழி, எவ்வளவு தமிழ் படித்தாலும் சிலருக்கு தெரியாது

நாங்கள் முயற்சி செய்கிறோம். நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனால், அதையெல்லாம் பார்க்காமல், நீங்கள் சம்பந்தமே இல்லாமல் கேலி செய்கிறீர்கள். நிறைய மாற்றங்களை செய்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு முன்பு இருந்த நிலைமைக்கும், இப்போது இருக்கின்ற நிலைமைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. கடந்த 65 நாட்களில் ரூ.15 ஆயிரம் கோடி அரசுக் கருவூலத்திற்கு வந்திருக்கிறது. இது எளிதான காரியம் கிடையாது. இது ஒட்டுமொத்த அமைச்சரவையின் முயற்சியால் கிடைத்த முன்னேற்றம்.

அதையெல்லாம் பார்க்காமல், நீங்கள் தமிழில் இப்படித்தான் பேச வேண்டும் என்று கூறுகிறீர்கள். என்னால் இப்படித்தான் பேச முடியும். இதுதான் என்னுடைய தனித்துவமான பேச்சின் நடை. இதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன். மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசுகிறேன்.

சபாநாயகர்:- நீங்களும் நன்றாகத்தான் பேசினீர்கள். அதோடு அந்தப் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம். இதை லேசாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:- முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழில் எப்படி பேசினார்? என்பது உங்களுக்கு தெரியும். அப்போதெல்லாம் எதிர்க்கட்சியினர் யாரும் கேலி, கிண்டல் செய்யவில்லையே.

அமைச்சர் மரிய வில்சன்:- என்னுடைய பாணி, பேசும்விதம் இதுதான். மற்றவருக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. மொழியை வைத்து கேலி, கிண்டல் செய்கிறீர்களா? (இப்படி ஆவேசமாக பேசிவிட்டு மைக்கை தள்ளிவிட்டு உட்கார்ந்தார்).

எ.வ.வேலு (தி.மு.க.):- அவையில் ராஜேந்திரன் முதன்முதலாக பேசுகிறார். மொழி பற்றிய உணர்வை அவர் வெளிப்படுத்தினார். மற்றபடி, அமைச்சர் இப்படியே பேசுங்கள். எங்களுக்கு பிரச்சினை இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory