» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.
கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.
"நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்-அமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதல்-அமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
காவிரி பிரச்னையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதன் மூலமாக உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்.
நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்து விடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!
ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதல்-அமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். டுவீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போரடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.
இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை.
யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.
ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உதயநிதி கைது: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:17:10 AM (IST)



BalaAug 4, 2026 - 05:39:36 PM | Posted IP 104.2*****