» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு!

வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

ArunachalamJudge.jpg

தூத்துக்குடியில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (24). இவர் கடந்த 17-ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல்துறையினர் அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது, அருணாச்சலத்திற்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:

மயங்கி விழுந்ததில் அருணாச்சலத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, காவல்துறையினர் அவரை உடனடியாகச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருணாச்சலம், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
உறவினர்கள் குற்றச்சாட்டு மற்றும் போராட்டம்:

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், "காவல் நிலையத்தில் வைத்துப் காவல்துறையினர் அருணாச்சலத்தைக் கொடூரமாகத் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்" எனக் குற்றஞ்சாட்டினர்.

மேலும், இது தொடர்பாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த உறவினர்கள், அருணாச்சலத்தின் உடலை வாங்க மறுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்த வேண்டும் மற்றும் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, அருணாச்சலத்தின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறாய்வுக்கூடத்திற்குக் கொண்டு வரப்பட்டு இன்று காலை பிரேத பரிசோதனை தொடங்கியது. பிரேத பரிசோதனை தொடங்குவதற்கு முன்பாக அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் மற்றும் தம்பி சுடலைமணி உள்ளிட்ட உறவினர்கள் வந்து உடலை அடையாளம் காட்டினர். 

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உடற்கூறாய்வு நிகழ்வு முழுவதும் முறைப்படி வீடியோ பதிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory