» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் மீது கல் வீசினால் 10 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை: தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை!

திங்கள் 23, மார்ச் 2026 10:56:17 AM (IST)

ஓடும் ரயில்கள் மீது கல் வீசி பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் மீது கல் வீசுவது சட்டவிரோதச் செயலாகும். இது பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், ரயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்குச் சேதத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து உள்ளே இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பலத்த காயங்களை உண்டாக்குகிறது.

ரயில் மீது கல் வீசுவது ரயில்வே சட்டம் 1989, பிரிவு 152-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

சென்னை கோட்டத்தின் முக்கியமான மற்றும் பதற்றமான பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறியக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தாலோ அல்லது கல் வீச்சு சம்பவங்கள் குறித்த தகவல் தெரிந்தாலோ, பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண்ணான 139-ஐத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory